தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

ஆய்வுக் கட்டுரைகள்

1 2 3 4 5
கவிஞர் பா.விஜய்யின் படைப்பாக்கத்திறன்
முனைவர் க.இராமச்சந்திரன்
திரு.எஸ்.இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரி,
சாத்தூர் 626 203

செம்மொழித் தமிழ் நெடிய வரலாற்றினைக் கொண்டது. குறிப்பாகக் கவிதை இலக்கியத்தின் களம் பரந்துபட்டது. அதன் தொடர்ச்சியாய் சமகாலக் கவிதையில் ஏராளமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறையினர் பலர் கவிதையின் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் இன்று, வித்தகக் கவிஞர் பா.விஜய் பலரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றவர். அவரது படைப்பாக்கத்திறன் குறித்த ஆய்வாக இக்கட்டுரை உள்ளது.

கவிஞர் பா.விஜய்யின் படைப்புகள்

மரங்களும், செடிகளும், கொடிகளும், உயிர்களுமாகத் தழைத்த காடுபோல கவிஞர் பா.விஜய்யின் படைப்புலகம் பரந்துவிரிந்து, அவரது இலக்கிய ஆளுமையின் ஊடாக நுழைகிறபோது இந்த வயதில் இவ்வளவு படைப்புகளா, புருவங்கள் உயர்கின்றன.

கவிதை, நாவல், திரைப்படப்பாடல் என்று பல்வேறு தளங்களில் படைப்புகளைப் படைத்துக் கொண்டிருப்பவர். இவரது படைப்புகளாக இதுவரை வெளிவந்தவை என்று வகைப்படுத்துவது ஆய்வின் ஒரு வகையாகும்.

கவிதையின் வாயிலாகவே தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். இவரை அடையாளப்படுத்தியது கவிதை வடிவம்தான்.

இதுவரை 45படைப்புகள் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றுள் கவிதைப் படைப்புகளாக
1. உடைந்த நிலாக்கள் (பாகம் 1 )
2. உடைந்த நிலாக்கள் (பாகம் 2)
3. உடைந்த நிலாக்கள் (பாகம் 3)
4. காற்சிலம்பு ஓசையிலே (பாகம் 1)
5. காற்சிலம்பு ஓசையிலே (பாகம் 2)
6. கண்ணாடி கல்வெட்டுகள்
7. வானவில் பூங்கா
8. சில்மிஷியே
9. நந்தவனத்து நட்சத்திரங்கள்
10. இந்தச் சிப்பிக்குள்
11. பதினெட்டு வயசுல
12. நிழலில் கிடைத்த நிம்மதி
13. தூரிகை துப்பாக்கியாகிறது
14. இரண்டடுக்கு ஆகாயம்
15. ஐஸ்கட்டி அழகி
16. பெண்கள் பண்டிகை
17. கடவுள் வருகிறான் ஜாக்கிரதை
18. காதல் காதலிகள்.காம்
19. காகித மரங்கள்
20. கைதட்டல் ஞாபகங்கள்
21. அடுத்த அக்னி பிரவேசம்
22. நம்பிக்கையுடன்
23. வள்ளுவர் தோட்டம்
24. ஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே
25. கறுப்பழகி
26. நண்பன் நண்பி
27. நட்பின் நாட்கள்
28. செய்
29. மோது முன்னேறு
30. சமர்
31. கண்ணே நீ கயாஸ் தியரி
32. இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)
33. ஒரு கூடை நிலா என்பனவாகும்.

நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என இலக்கிய வகைகளாக ஐந்து படைப்புகள் வெளிவந்துள்ளன.
1. இரண்டு நாவல்கள்
(போர்ப்புறா, வாழ்க்கைத் தேடி வானம்பாடிகள்)
2. அரண்மனை ரகசியங்கள்
3. சௌபர்னிகா
4. பேச்சுலர் அறை
5. மஞ்சள் பறவை

கவிஞர் பா. விஜய்யை அதிக அளவில் அறியச் செய்தது அவரது திரையிசைப் பாடல்கள் எனலாம். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இந்தப் படைப்புகள் எல்லாமே கவிதைத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். படைப்பாளர்களும், பதிப்பாளர்களும் பார்த்து வியந்த விழாவாக விஜய்யின் படைப்புலகம் தொடங்கியது என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

கவிஞரின் படைப்பாக்கத்திறன்

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே கவிதையின் ஊற்றுக் கண்திறந்ததாகக் குறிப்பிடுகிறார் பா.விஜய். அப்போதே கண்ணியம் சிற்றிதழில் இவரது படைப்புகள் அச்சாக்கம் பெற்றன. வழக்கமாய், இன்று கவிதை எழுதுபவர்கள் புதுக்கவிதைதான் எழுதுவார்கள். ஆனால் இவரோ தொடக்கத்திலேயே மரபுக் கவிதைகளை எழுதியவர். பல புதுக்கவிஞர்களின் வெற்றிக்குக் காரணம் அவர்கள் மரபறிந்து மரபை மீறியவர்கள். அதுபோல கவிஞர் பா.விஜய்யின் வெற்றிக்குக் காரணம் இந்த படைப்பாக்கத் திறன்தான்.

யாப்பென்பது

சிலந்தி வலை அல்ல சிக்கலாய் இருத்தலுக்கு அதுவும் பூக்களால் சரம் தொடுப்பது மாதிரி சாதாரண சமாச்சாரம்தான் நிழலில் கிடைத்த நிம்மதி என்று குறிப்பிடுகிறார்.

இத்தொகுப்பு முழுவதுமே விருத்தம், கட்டளைக் கலித்துறை, வெண்பா, அறுசீர்விருத்தம், ஆசிரிய விருத்தம் என்ற பழைய யாப்பு மரபில் எழுதப்பட்டுள்ளது. யாப்பு வடிவத்தின் உள்ளடக்கத்திற்கேற்பவே மொழி இன உணர்வுகளை மையப்படுத்தியே உள்ளடக்கம் அமைந்துள்ளது. திராவிட இயக்க உணர்வு மிக்கவராக, பாரதிதாசன் பற்றாளராகத் தம்மை தொடக்கம் முதலே அடையாளப்படுத்தியிருப்பதை இத்தொகுப்பின் வழி கண்டறிய முடிகிறது.

அவனே தமிழன் என்ற மரபுக் கவிதையில்

புதுயுகத்தின் புலிப்படைக்குத் தளபதி நீயே எது நெருப்பு என்னென்னைக் கேட்டால், பற்றி எரிகின்ற எழுகின்ற தமிழா உன்னை இது நெருப்பு எனபேனா இமய விளிம்பே இரையுண்ண அலைகின்ற கழுகல்லவே நீ எதுவரினும் எதிர்க்கின்ற ராஜாளி என்றால் அதுவுமல்ல தீகக்கும் நீ ஓர் கனவுப் பறவை நிழலில் கிடைத்த நிம்மதி என்று இளைஞர்களை மரபின் தளத்திலிருந்து எழுப்புகின்ற பாரதிதாசனின் புரட்சிக் குரலை விஜய்யின் மரபுக் கவிதைகளில் எதிரொலிப்பதைக் கேட்க முடிகின்றது.

புதுக்கவிதை

கவிஞர் பா.விஜய்யின் கவிதைப் படைப்புகளில் மரபின் தாக்கத்தைவிட புதுக்கவிதையின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. நந்தவனத்து நட்சத்திரங்கள் என்ற தொகுப்பு மண்ணின் மகத்துவத்தையும், குழந்தை, காதல், வரதட்சணை என்ற பன்முகங்களைக் கொண்ட சமூகச் சித்திரிப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்பாகும். சுதந்திர இந்தியாவின் விடியலுக்காக தங்களையே மெழுகாக்கி உருகிய தியாகிகளைப் பற்றிய ஒரு கவிதை.

தீபத்திற்கு

தீ வழங்க வந்த தீக்குச்சியே
திரியில் தீ எரிய பிறகு
குப்பைக்குப் போய் விடுவதைப்போல
என்று உவமையின் வழியே தியாகிகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

காகித மரங்கள் என்ற கவிதைத் தொகுப்பில் பேனா என்பது மை நிரப்பிய கோல் அல்ல. அது உரிமை உசுப்பிய செங்கோல் என்ற கவிப்பிரகடனத்தோடு கண்விழிக்கிறது கவிதையின் ஆளுமை. இதில் உள்ள பல கவிதைகளும் நிகழ்வுக் கவிதைகளாக உள்ளன.

பொங்கல் பண்டிகை, தீபாவளித் திருநாள் போன்ற பண்டிகைகளுக்காக எழுதப்பட்ட படைப்புகள் நிரம்ப உள்ளன. தினசரி வார இதழ்களுக்காகத் தினங்களைப் போற்றும் விதமாக இருந்தாலும் சமூகச் சீரழிவுகளை மூன்றாம் கண் கொண்டு பார்க்கும் படைப்புப் பார்வை இவற்றுள் தென்படுகிறது.

தமிழனின் திருநாளை

மும்பை நடிகை முன்மொழிய
ஆங்கில வாசிகள் வழிமொழிய
பொங்கின தொலைக்காட்சியில்
............................ காகித மரங்கள் (ப.17)
என்று சித்திரித்துள்ளார்.

வல்லரசு என்ற தலைப்பிலான கவிதையில்...

இந்தியா ஒரு
வித்தியாசமான நாடு
இருபது வயது வாலிபனிடம்
நடை வண்டி தரும்
அறுபது வயது முதியவரிடம்
அதிகாரம் தரும் .....காகித மரங்கள்
என்று தொடங்குகின்றது. இக்கவிதையில் இளைஞர்களின் ஆற்றல் புறக்கணிக்கப்படுவதைக் காட்டி இந்திய கஜானாவை இளைஞனிடம் தாருங்கள்
இளைஞனுக்கு
ஊடல் செய்யத் தெரியும்
ஊழல் செய்யத் தெரியாது
.............................காகித மரங்கள் (ப.24,25)

என்று கவிஞரின் இளைமை கவிதைகளில் பட்டுத் தெறிப்பதைக் காண முடிகிறது. படைப்பாக்கத்திறனில் கவிதைத் தலைப்புகளுக்கும் பங்கு உண்டு. கவிஞர் பொறுத்தமாய்த தலைப்புத் தந்துள்ளமை இவரது கவித்துவத்தின் ஆற்றலைப் புலப்படுத்துகின்றது. இத்தொகுப்பின் பிற்பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ்பாடும் பரணி இலக்கியமாகத் திகழ்கின்றது. அன்னை அஞ்சுகமே உன்னைப்பாடுகிறேன். செவாலியரும் செம்முடிச் சோழனும், கலைஞரதிகாரம், இலக்கியத்தின் ஜனாதிபதியும் இந்தியாவின் ஜனாதிபதியும போன்ற தலைப்புகளில் கவிஞருக்கான முகத்தைக் கவிஞர் காட்டியுள்ளார்.

ஏழைகளுக்கு கருணாநிதியே
எடுத்தெடுத்துத் தரட்டும் என்றா
கண்மலர்கள் விழித்தபோதே
கருணாநிதி என பெயரிட்டாய்

என்று அஞ்சுகத்தாயை வாழ்த்தி, வாழ்க நீ எம்மான் இந்த வையம் உள்ள மட்டும் என்று கலைஞரின் வாழ்த்தியலோடு கவிதை முடிகிறது. மகாத்மா காத்தியடிகளைப் பற்றி பாரதி பாடிய பாடல் வரிகளை இவ்வரிகள் நினைவுபடுத்துகின்றன.

கைத்தட்டல் ஞாபகங்கள் என்ற கவிதைத் தொகுப்பு பல்வேறு கவியரங்குகளில் வாசிக்கப்பட்ட கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பாகும். பாரதி தொடங்கி கலைஞர் வரை கவிதைகளால் மணிமகுடம் சூட்டியிருப்பதைக் காணலாம். இத்தகைய கவிதைகள்தான் கவிஞர் பா.விஜய்யை வித்தகக் கவிஞர் பா.விஜய் என்ற பட்டத்திற்கான அங்கீகாரத்தை தந்தன எனலாம். இரண்டடுக்கு ஆகாயம் என்ற தொகுப்பில் கல்லில் தொடங்கி இயற்கையைப் பாடுவோம் என்ற தலைப்பு வரை மௌனம், தூக்கம், கண்ணாடி, கனவு மெய்பட வேண்டும் என்ற பல்வேறு தலைப்புகளில் சமூகச் சித்திரிப்பு கவிதைகள் பல இடம்பெற்றுள்ளன.

நம்பிக்கையுடன் என்ற தொகுப்பில் புதுக்கவிதைகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுப்பு இளைஞர்களை வழி நடத்திச் செல்லும் நம்பிக்கை நாற்றங்களாகும்.

காதல்

சங்க இலக்கியம் அகத்திணை, புறத்திணை என்ற இரு கூறுகளைக் கொண்டது. அதுபோல் இன்றும் சில கவிஞர்கள் தங்கள் படைப்புகளை அகம் புறம் என்று பிரித்துக் கொண்டு வெளியிட்டு வருகின்றனர். இக்கூறு புதுக்கவிதையின் நவீனப்போக்குகளில் அதிகமாகத் தென்படுகின்றன. முதன்முதலில் கவிஞர் மு.மேத்தா நடந்த நாடகங்கள், நந்தவனத்து நாட்கள் என்ற இரு தொகுப்புகளில் காதலை மையமாகக் கொண்டு வெளியிட்டார். வாகர்களின் வரவேற்பைப் பெற்றன. கவிஞர் முமேத்தாவின் கண்ணீர்ப் பூக்களைப் படித்து கவிதை எழுதக் கற்றுக் கொண்டேன் என்ற குறிப்பிடும் கவிஞர் பா.விஜய்யும் அவரது உத்திகளைப் பின்பற்றியே கவிதைத் தொகுப்புகளையும கட்டமைத்துள்ளதைக் காண முடிகிறது. காதல் காதலிகள்.காம் என்ற இக்கவிதைத் தொகுப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்த தொகுப்பாகும். நகரக்காதலில் தொடங்கி பள்ளிக்காதல் அலுவலகக் காதல் மழைக்காதல், கல்லூரிக் காதல் என்று வளர்ந்து, இறுதியில் கல்லறைக் காதலோடு முடிகிறது. இக்கவிதைத் தொகுப்பின் அணிவகுப்பு. கல்லூரிக் காதல் என்ற தலைப்பிலான கவிதையில் முதல்நாள் பார்வையிலேயே
முடிவாகிவிட்டது
நான் உன்னை
காதலிக்கப் போகிறேன் என்று
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பரிட்சை ஹாலில்
சாமி கும்பிட்டுவிட்டு
விரல்களால் நீ
உதட்டைத் தொட்டு
உச்...உச்.... என்பாய் நான்
அரியர்ஸ் வைக்க
அந்தக் காட்சிகளே காரணம்.
காதல் காதலிகள்.காம்

என்று கவிதைத் தலைப்பிற்கேற்ப கவிதையைச் செதுக்கியிருக்கும் செம்மையை இக்கவிதையில் கண்டுணர முடிகிறது. சில்மிஷியே என்ற கவிதைத் தொகுப்பு படிப்பவர்களின் மனதைக் கனக்க வைத்த தொகுப்பாகும். கவிதையின் வரிகள் கவித்துவமானதுதான். ஆனால் அச்சில் வார்த்துள்ள படங்கள் கண்களை மூடவைக்கின்றன. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற அடையாளத்தோடு வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

படிக்கின்ற போதுகூட பிறரது கண்களில் படாமல் மறைத்து வைத்துத்தான் படிக்க வேண்டியுள்ளது. ஆனால் இதுதான் பல பதிப்புகளைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞரின் இளமையின் துடிப்பும், வணிக நோக்கத்தையும் மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்ட படைப்பாகத் தோன்றுகிறது. 18வயசுல என்ற புதுக்கவிதைத் தொகுப்பு நற்றினை, குறுந்தொகையைப் போன்று சிறு சிறு நிகழ்வுக் கவிதைகளாக உள்ளன. இதுவும் முழுக்கவும் காதலைச் சித்தரிப்பதாகும். இதிலும் பள்ளி, கல்லூரிக் காதலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.

பாஸாக வேண்டும் என்று
கோயில் சுவற்றில் இருவருமே
பெயர் எழுதினோம்...
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும்தான்
பார்க்கிறது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உன்கால் தடங்களைக் கண்டால்
அழித்து விடுவேன்
தேவதையின் பாதச் சுவடுகள்
தெருவில் கிடப்பதா

இப்படியாய் இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள புகைப்படங்கள் கவிதை வரிகளுக்கு உயிரூட்டத்தைத் தருபவையாக உள்ளன. கவிஞரின் கவித்துவமான வரிகள் இளைய மனங்களை ஈர்க்கும் ஆற்லைப் பெற்றுள்ளன. அதிகமான வாசகர்களை இத்தகைய கவிதைத் தொகுப்புகள்தான் கொடுத்திருக்கின்றன. இளமையின் துடிப்பும், இலக்கியத்தில் தன்பெயரை நிலை நிறுத்திட வேண்டும் என்கிற தாகமும் புதிய படைப்புகளை நோக்கி அவரை நகர்த்தியுள்ளன. காலமாற்றத்தில் கவிஞரிடமிருந்து நல்ல அடர்த்தியான கவிதைகளை இன்னும் பெறலாம். காலம் இன்னும் இருக்கிறது.

1 2 3 4 5
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு