தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
சேவல் கொடி பறக்குதடா- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு சேவல் கொடி பறக்குதடா  Movie Name  பில்லா 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

எனக்கு எப்போதுமே தமிழ்க்குலக் கடவுளான முருகப் பெருமான் மீது தனிப்பெரும் பக்தி உண்டு. என்னுடைய கலையுலக பயணத்தில் கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் சந்தித்த சாதனைகளுக்கெல்லாம் காரணம் நான் என்று ஒருபோதும் எண்ணிக் கொண்டதில்லை.

ஏதோவொரு சக்தி என்று குழப்புவதைவிட, இறைவனின் அருள் நம்மை வழிநடத்துகிறது. அந்த அருளே சமநிலையில் பயணிக்க வைக்கிறது; பிறகு ஒரு வேகத்தைக் கொடுப்பதற்காக பள்ளத்திலே இறக்குகிறது; பள்ளத்தில் இறங்கிய நம்மை இரண்டுமடங்கு வேகத்துடன் மேட்டில் ஏற்றிவிடுகிறது; மிக அகண்ட கரைகளை அறிமுகப் படுத்துகிறது; மகா சமுத்திரங்களோடு சங்கமிக்கச் செய்கிறது என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.
   
எந்த ஊருக்கு இலக்கிய நிகழ்ச்சிகளுக்காகச் சென்றாலும், அங்கே உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவது என்னுடைய வாடிக்கை. அவ்விதத்தில் கந்த வேலின் மீது எனக்கொரு ஆழ்ந்த நம்பிக்கையும் அகண்ட நேசமும் உண்டு. இறைவன் எப்படி தோன்றினான், இறைவனை மக்கள் எப்படி உருவாக்கிக் கொண்டார்கள் என்பது போன்ற மேதாவிலாசத்தனமான வினாக்களை எழுப்பிக் கொள்ளாமல், நிறைய சமயங்களில் நம் மூதாதையர்களின் வடிவங்களை, நம் முன்னோர்களின் நாமங்களை வழிபடத் துவங்கிய இனம் நம் இனம்.
   
அந்தவிதத்தில் முருகன் என்கிற இறைவன், தமிழ்க்குலத்தில் பன்நெடுங்காலத்திற்கு முன்பு நம் சமூகத்தோடு ஒரு மனிதனாய் வாழ்ந்து, தலைவனாய் இருந்து, தெய்வமாய் இன்று நமக்குள் நிறைந்திருக்கிற ஒரு சக்தி என்றே நான் உணர்கிறேன். அதற்கான சான்றுகளையும் நான் படித்து இருக்கிறேன். அருணகிரிநாத சுவாமிகளின் பாடல்கள் வாயிலாக, சித்தர்கள் பாடிய வாக்கியங்கள் வாயிலாக அவ்வுணர்வு என்னுள் என்றுமே உண்டு.
   
பக்தி இலக்கியங்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட எனக்கு பக்திப் பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகத்தான் அமையும். ஆங்காங்கே சிற்சில பாடல்கள் சில வெளிநாட்டு தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் வழிபடுகின்ற ஆலயங்களுக்கு தனிப்பாடல்கள் எழுதித் தருவது என்று பக்திப் பயணம் செய்து கொண்டிருந்தாலும், திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது எட்டுப் பாடல்கள் எழுதித் தருவதற்கான வாய்ப்பு இயக்குநர் சுரேஷ்ணா அவர்கள் மூலம் கிடைத்தது. திருச்செந்தூர் தேவஸ்தானத்தில் இருந்து அழைப்பு வந்த காரணத்தால், இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையிலே முருகப்பெருமான் மீது மிக ஆழ்ந்த பக்தி லயமிக்க கடுங்காதல் கொண்டு எழுதப்பட்ட எட்டுப் பாடல்களும் என்னுடைய ஆன்மீக தாகத்தை சற்றே சாந்தி செய்தது.
   
அதன்பிறகு ஆங்காங்கே ஓரிரு பாடல்கள் எழுதி வந்தாலும், சமீபத்தில் கூட திருத்தொண்டர் புராணத்தை சிதம்பரம் என்கிற ஒரு நபர், சிறந்த பக்திமான்! முழுக்க முழுக்க தன்னுடைய பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாய் ஒரு தொடர் நாடகமாய் தயாரித்துக் கொண்டிருக்கிறார். திருத்தொண்டர் புராணத்திற்கு பல நாயன்மார்களின் பாடல்களை எழுதும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

நானேகூட திருத்தொண்டர் புராணத்தை புதுக்கவிதையில் எழுத வேண்டும் என்ற பெரும் கனவை எனக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கான ஆதாரங்களையும் அரிதான தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையிலே இப்படியயாரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சிலாகித்துக் கொண்டு அப்பணியை செய்து கொண்டிருக்கிறேன். 
   
இருந்தபோதிலும், திரையுலகத்திலும் சரி, வெளியே இலக்கிய உலகத்திலும் சரி,  பக்தி ரீதியாக, கடவுள் பற்றி எழுத எனக்கு வருகின்ற வாய்ப்புகளில் பெரும்பாலான வாய்ப்புகள் முருகனைப் பெற்றி எழுதுவதற்காகவே அமையும்.  அது தானாக அமைகின்ற ஒரு தவமென்றே நான் கருதுகிறேன்.  அப்படித்தான், சமீபத்தில் இயக்குநர் சுப்ரமணியசிவா இயக்குகின்ற சீடன் படத்தில்கூட ஒரு பாடல்! அது அற்புதமான பக்தி லயமிக்க பாட்டு!
   
மற்றொரு இசை சேர்க்கையில், ஒரு நண்பருக்காக பாடல் எழுதும்போது, அப்பாடல் முருகன் பற்றி அமைய, அதுவும் முருகனே பாடுவதுபோல் அமைந்தவொரு பாடல். எனக்கு மிகப்பெரிய மெய் சிலிர்ப்பு உண்டானது. முருகனைப் பற்றி எழுதுகிற வரம் பெரிது! அதைவிட பெரிது முருகனே பாடுவதுபோல்  என்பது மிகப்பெரிய வரம் என்று அந்த நண்பரோடு என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டேன்.
   
அந்தவிதத்தில், குதூகல கூட்டணியாய் எப்போதுமே அமைந்திருக்கும் யுவன்‡விஷ்ணுவர்த்தன் இவர்களோடு தொடர்ச்சியாய் பல படங்களில் பாடல் எழுதிக் கொண்டிருந்த எனக்கு பில்லா திரைப்படத்தில் முழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பில்லா திரைப்படம்  ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் நடிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்த படம்.
   
அந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ஒரு நவீனமான சினிமாவாக தன்னுடைய தனித்துவமான இயக்கத்தில் அதை இயக்கினார். படத்திற்கென்று ஒரு புதிய நிறம், வடிவம் அவரால் வழங்கப்பட்டது. பாடல்களும் அவ்விதமே அமைந்தன. யுவனின் இளமை துள்ளும் இசையில் என்னுடைய வரிகளும் கைகோர்க்க, பல அழகிய பாடல்கள் நவீனத்துவம் பொங்கி வழிய  படமாக்கப்பட்டன.
   
பில்லா திரைப்படத்திலே ஒரு பாடல்!  மலேசியாவில் இருக்கின்ற பிரம்மாண்ட முருகப்பெருமானின் சிலைக்கு முன் திரு.அஜித்குமார் அவர்கள் ஆடிப்பாடி நடிப்பதைப் போன்ற சூழல். முருகா என்றதுமே மறுநொடியே எனக்குள் முழுமையானதொரு  ஈடுபாடு பிறந்தது. இந்தப் பாடலுக்குள் முருகனுடைய தனிப்பெரும் கதையோடு, முருகன் என்பவர் நம்மோடு வாழ்ந்த ஒரு மகா மனிதன், நம்மை வழிநடத்திய சக்தி என்பதை விளக்க முற்பட்டேன். அந்தப் பாடலில் பல பகுத்தறிவு சிந்தனைகளை தெளிக்க முடிந்தது.
   
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்; அந்த முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன்தான்! என்ற வரியிலும் சரி, அதன்பிறகு முருகனுடைய வரலாற்றைச் சொல்லும் விதமாக காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த வேலய்யா பாட்டுக்குள்ள ஒன்ன வச்ச பாடட்டா என்ற வரியில் நம்முடைய மூதாதையரான பெருமிதத்தையும் விளக்க முடிந்தது.
   
அதேபோல, பெரும்பாலான ஆலயங்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதமே பிரதானமாக அர்ச்சனை மொழியாக இருக்கின்ற காலகட்டத்தில், அதை சாடுகிற ஒரு செய்தியாகவும் அந்தப் பாடலிலே இப்படி வாசகத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். தமிழில் பேசும் தமிழ் குலவிளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு என்ற வரி பகுத்தறிவு சாட்டையாக பாட்டிலே ஒலித்தது.
   
அதே மாதிரி, சூரபத்மனை முருகன் வென்ற புராணத்தை அந்த ஜனரஞ்சகமான பாடலிலே, சூரனையும் சூளுக்கெடுத்தான் நம்மாளு என்ற கமர்´யல் வரியின் மூலமாக கந்தபுராணத்தை விளக்க முயன்றதை எண்ணி நிறைவடைந்து கொண்டேன். அந்தப் பாடலுக்குள் நான் பொதித்து எழுதிய பல ஆன்மீகம் கலந்த லெளகீக தத்துவங்கள், பகுத்தறிவு விசாரணைகள் வெகுசனங்களுக்கு போய் சேர்ந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆங்காங்கே ஓரிருவர், அயல்நாடுகளிலே வாழ்கின்ற தமிழர்கள் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு அப்பாடலுக்குள் புதைந்து கிடந்த கருத்து முத்துக்களை கண்ணீர் பணிக்க என்னுடன் பகிர்ந்து கொண்டதுண்டு.
   
இசையின் தாளத்திற்கு ஏற்ப, ஒரு வீர பாட்டாக அப்பாடல் மக்கள் மத்தியிலே சேர்ந்திருக்கிறது என்பது ஊர்ஜிதம். ஆனால், நான் எண்ணி எழுதிய கருத்துக்கள் சேர்ந்துள்ளனவா என்பதை நான் இதுவரை அறியவில்லை. ஆயினும், சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா என்கிற பாடல் எப்போது கேட்டாலும் முருகன் மீது தீவிரமானதொரு பக்தியையும் ரத்தநாளங்களை உசுப்பேத்துகின்ற வேகத்தையும் யுவன்  இசையோடு கலந்த என் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன என்பது மட்டும் இன்றளவும் என்னால் உணர்ந்து கொள்ளக் கூடிய உண்மை.
   
இந்தப் பாடலை, இளமை துள்ளும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கும், இயக்குநர் விஷ்ணுவர்த்தன் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

படம்    :    பில்லா
இசை    :     யுவன் ­ங்கர் ராஜா
பாடியோர்    :    விஜய் யேசுதாஸ், குரூஸ்

பல்லவி

வேல்.. வேல்..
வேல்.. வேல்..

சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா..

காக்க காக்க காக்குமடா
நோக்க நோக்க தாக்குமடா
பார்க்க பார்க்க பரவுமடா  முருகய்யா..

தமிழனுக்கு முப்பாட்டன்
முருகன்தான் ‡ இந்த
முப்பாட்டன் எங்களுக்கு
தலைவன்தான்

ஏய்..
காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள  வந்த
எங்க வேலய்யா ‡நான்
பாட்டுக்குள்ள 
ஒன்ன வச்சு பாடட்டா!


சரணம் ‡ 1

தெருக்கூத்து தமிழனுக்கு முதல் ஆட்டம்
புலிவேசம் எங்களுக்கு புகழ் கூட்டும்!

வீரம்தான் தமிழனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சூளுக்கெடுத்தான்  நம்மாளு

வேடனடா வேடன் ‡ இவ
தணிகைமலை நாடன்
வீரனடா வீரன் ‡ நம்
கந்தனுக்குப் பேரன்!

ஆதித் தமிழன்
ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன்
அடிமைகள் ஆனான்

சரணம் ‡ 2

மனு­ன்தான் முருகனோட அவதாரம்
வீரத்த தத்தெடுத்த சிவ‡தாரம்!

வேல்குத்தி  ஆடும்போது வெறியேறும்
பேர்சுத்தி ஓடும்போது .பொறியாடும்.

ஏறு மல ஏறு
எங்க அண்ணன நீபாரு
ஆறுமுகம் யாரு
நம் நண்பன்தானே கூறு!

தமிழில் பேசும்
தமிழ் குலவிளக்கு
வேற்று மொழியில்
அர்ச்சனை எதுக்கு?

இறுதி பல்லவி

விண்ணும் மண்ணும் தடதடக்க
காத்தும் புயலும் கடகடக்க
வாரான் வாரான் மலையேறி வேலய்யா..

வேலும் மயிலும் பரபரக்க
காடும் மலையும் வெடவெடக்க
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா..

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு