தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
வலியே!என் உயிர் வலியே!- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு வலியே!என் உயிர் வலியே!  Movie Name  தாம்தூம் 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

நினைவுக் கோப்பையின் ரசம்  இதயத்தால் பருகப்படும்போது, வாழ்க்கையின் ருசியை நாம் உணர ஆரம்பிக்கிறோம். திரைப்படத்துறை என்பது மிக ஆழ்ந்த நட்பை அதிசயமாக மாத்திரமே தரக்கூடிய இடம். இங்கே அரசியல் போலவே நிரந்தரமாக யாரும் நண்பர்களாக இருப்பதில்லை; நிரந்தரமாக யாரும் எதிரியாக இருப்பதில்லை. எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். எல்லோர்வசமும் ஏதோவொரு முக மூடியைப் பொருத்திக்ய காண்டே இருக்கிறோம். யாரும் யாருடைய வெற்றியிலும் இங்கே உள்ளப்பூர்வமாக  வாழ்த்துக்களைக் குவிப்பதில்லை.
   
நான் வேடிக்கையாய் பார்ப்பதுண்டு. ஒரு திரைப்படப்பாடல் இசை வெளியீட்டு விழா நடக்கும்போது அது எனக்கு ஒரு காமெடி நிகழ்ச்சி மாதிரியே தெரியும்.

ஏனெனில் திரைப்படப் பாடலை வடிவமைத்த இசையமைப்பாளர், அந்தப் திரைப்படப் பாடலை எழுதிய கவிஞர், உயிர்கொடுத்துப் பாடிய பாடகர், திரைக்குக் கொண்டுவந்த நடன இயக்குநர், இவர்களில் யாருமே இல்லாமல் அந்தத் திரைப்படத்திற்கு சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த இசையை வெளியிட்டு எதைப்பற்றியுமே தெரியாமல் ஏதோவொன்றைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
   
அந்தப் படைப்பிற்காக பாடுபட்டவர்கள் எல்லோரும் அழைப்பிதழ்கூட கிடைக்கப் பெறாதவர்களாய் அதையும் வெளியே சொல்ல முடியாமல் அந்த அரங்கத்தின் ஏதோவொரு இருக்கையிலே அமர்ந்து கொண்டு தங்களுடைய படைப்பைப் பார்த்து ஓரக்கண்களிலே ஆனந்தக் கண்ணீரோடு அமர்ந்திருப்பார்கள்.

அந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பங்கேற்காத உணர்வே மேலொங்கி நிற்கும்.  ஏனென்றால் அங்கே அவர்களுக்குத் தேவை ஒரு நட்சத்திர அணிவகுப்பு. மறுநாள் செய்தித்தாள்களுக்கு பளிச்சென்று இருக்கக் கூடிய முகங்கள். இவைதானே தவிர! அந்தத் திரைப்பாட்டிற்காக உழைத்தவர்களை கெளரவிக்க வேண்டும் என்கிற நோக்கம் கிஞ்சிற்றும் அங்கே காணப்படுவதில்லை.
   
நான் மேலே கூறியவை தொண்ணூறு சதவிகீதம் நடக்கின்ற நிஜம்! பத்து சதவீகிதம், படைப்பின் கர்த்தாக்கள், அதற்குரிய ஆசனங்களிலே அமர்த்தப்படுகிறார்கள்.  இவைகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், இங்கே ஆழ்ந்த நட்பு அருநெல்லிக்கனியைப் போன்று எங்காவது ஓரிடத்தில்தான் காணப்படுகின்றன.
   
அப்படியயாரு நட்பு இயக்குநர் ஜீவா அவர்களுடன் ஏற்பட்டது. மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்; ஏராளமான திரைப்படங்கள் அவருடைய கைவண்ணத்திலே ஒளிப்பதிவு செய்யப்பட்டு, மிக அழகிய தமிழ் சினிமாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். ஒளிஓவியத்தை அவருடைய கண்கள் தூரிகையாய் மாறி வரைந்ததைக் கண்டு திரையுலகில் பல பிரம்மாக்கள் பிரமித்ததுண்டு.

அப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்கள் ஒருகாலகட்டத்தில் இயக்குநராக வடிவம் எடுத்தார். ஒரு நவீனத்துவமான மெல்லிய காதல் இழையோடும் முழுக்க முழுக்க இசை பரிமளிக்கும் திரைப்படத்தை எடுப்பதுதான் அவருடைய பாணி.
   
தொடர்ச்சியாய், அவருடைய படங்களிலே பாடல் எழுதி வந்த எனக்கு அவரோடான முதல் பட வாய்ப்பு உள்ளம் கேட்குதே என்கிற திரைப்படம் மூலம் கிடைத்தது. அத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதிய நான், அதன்பிறகு தொடர்ந்து அவருடைய படங்களிலே பாடல்களை எழுதிக் கொண்டிருந்தேன்.
   
குறிப்பாக, எனக்கு ப்லீம்பேர் விருதினைப் பெற்றுத் தந்த ஒரு அற்புதமான பாடல் ஜீன் போனால் ஜீலைக்காற்றே என்கிற பாடல். அந்தச் சூழலே ரொம்ப சுகமானது.

நட்புக்கும் காதலுக்கும் இடையில் நின்று தவிக்கின்ற ஒரு இளைஞன், ஏகாந்தமான வாழ்க்கையைப் பற்றியும் அதில் கட்டப்பட்டிருக்கின்ற கட்டுக்களை அவிழ்ப்பதற்கான எண்ணங்களையும், சிறகடிக்கத் துடிக்கும் தன் சிந்தனைகளையும் ஒன்றுகூட்டி உலகத்தின் மேல்நின்று, பேர்டுவியூ என்று சொல்வார்களே பறவைகளின் கண்கள் வழியாய் பறந்த உலகத்தைப் பார்த்து பாடுவதுபோல் ஒரு பாடல். இசை ஹாரிஸ்ஜெயராஜ்!
   
உண்மையிலேயே தமிழ்ச் சினிமாவில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு இசையமைப்பாளர்.  வார்த்தைகள் இசைக்குள் சிக்கி வழுக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், வார்த்தைகளை மெல்ல மெல்ல மயிலிறகால் வருடிவிட்டு அவற்றை கேட்பவர்களின் இருதயம் வரைக்கும் இறங்குகின்ற வகையிலே மிக அழகாக கோர்வைசெய்து ஹாரிஸ்ஜெயராஜ் அவர்கள் இசைப் பங்களிப்பு செய்கின்ற விதமே தமிழ் உலகம்  அவருக்கு நிச்சயம் நன்றி பாராட்டுகின்ற வகையிலே அமைந்திருக்கின்றது.
   
திரைப்படப்பாடலில் வார்த்தைகள் புரிவதில்லை புரிவதில்லை என்கின்ற குற்றச் சாட்டை அவருடைய இசைத்துவமான படைப்புகள் மிகப்பெரிய அளவில் உடைத்து நொறுக்கி உள்ளன.  அது என் பாட்டு, இவர் பாட்டு, அவர் பாட்டு என்றில்லாமல் யார் பாட்டாக இருந்தாலும் பட்ட பாட்டை வெளிப்படுத்த அந்த வார்த்தைகளுக்கு அவர் தருகின்ற முக்கியத்துவம் மிகப் பெரிது. மொத்தத்தில் கேட்க வேண்டியது வார்த்தைதான். வார்த்தைக்குத்தான் முதலிடம் என்பது அவருடைய இன்பமான பிடிவாதம். அவருடைய கூட்டணியில் ஏராளமான படங்களில் பாடல் எழுதியிருக்கின்ற எனக்கு, இயக்குநர் ஜீவாவோடு கைகோர்த்து உன்னாலே உன்னாலே திரைப்படத்திற்கு பாடல் எழுதி  முடித்தேன். அதன்பிறகு தொடர்ச்சியாக தாம் தூம் என்கின்ற திரைப்படம்.
   
மிக மெல்லிய நட்பு நீரோடையாய் கசிந்து கொண்டிருந்த இயக்குநர் ஜீவா அவர்கள்,  தாம்தூம் திரைப்படத்திற்காக பாடல் மெட்டமைக்கும் போதெல்லாம் என் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக  ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் மெட்டமைத்ததற்கு நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று படித்துக்கூட பார்க்காமல்  வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார். நானும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடன் இணைந்து பாடல் வரிகளைத் தேர்வு செய்து பதிவு செய்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தோம். பாடல்கள் அங்கே படப்பிடிப்பாகிக் கொண்டிருந்தது.  ஒருநாள் அந்த திடுக்கிடும் செய்தி திரையுலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
   
ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலைப் பொழுதில் இயக்குநர் ஜீவாவின் உயிர் பிரிந்து விட்டது என்ற செய்திதான் திரையுலகே அதிர்ச்சிஅடைந்த காரணம். மிக நெருங்கி பழகிய திறமையானதொரு கலைஞர் ; வலிமையான கலைஞர்; நட்பின் புன்னகைபோல் இருக்கின்றவர் மறைந்த செய்தி எங்களை மிகப்பெரிய அளவில் பாதித்தது. அதுவும் அவருடைய திரைப்படத்திலே பணிபுரிந்து கொண்டிருக்கும் போது இருந்த நெருக்கத்தில்  அந்தப் பிரிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பு அலைகளை ஏற்படுத்தியது. அவர் மறைந்த பிறகு அந்தத் திரைப்படத்திலே பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞர்களால் அவர் இல்லாமல் அத்திரைப்படத்திலே பணிபுரிய மனம் ஒன்றிவர இயலவில்லை. இருந்தாலும் அவர் இருந்த இடத்தை மனதிலே நிரப்பிக் கொண்டு, அனைவரும் சேர்த்து அத்திரைப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள்.
   
தாம்தூம் திரைப்படம் வெளிவந்தது. உண்மையில் சொல்லப்போனால் இயக்குநர் ஜீவாவின் இழப்பில் அழகான தமிழ்ச்சினிமாக்களை நாம் இழந்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.  அவருடைய நட்பின் உரையாடல்களை நன்றிப் பெருக்கோடு சொல்லி, ஃப்லிம்பேர் விருது மேடையிலே அந்த திரைப்படத்திற்கான பாடலாசிரியர் விருதை நான் பெற்றுக் கொண்டேன்.
   
மேடையில் இருந்து நான் இறங்கும் போது, விருதும் என் விழியும் சிறிது நனைந்திருந்தன. அந்தத் துளிகளில் இருக்கும் தூய நட்பின் சத்தியத்தில் நட்பின் வலியை உணர்த்திய இயக்குநர் ஜீவா என்கின்ற நண்பருக்கு  இந்தப் பாடலை நான் சமர்ப்பணம் செய்கிறேன்.

படம்    :    தாம் தூம்
இசை    :     ஹரிஸ் ஜெயராஜ்
பாடியோர்    :    பாம்பே ஜெயஸ்ரீ, கிருஷ்

பல்லவி

வலியே!
என் உயிர் வலியே!
நீ உலவுகிறாய் 
என் விழி வழியே!

சகியே!
என் இளம் சகியே!
உன் நினைவுகளால்
எனைத் துரத்துறியே!

மதியே!
என் முழு மதியே
வெண் பகல் இரவால்
நீ படுத்துறியே!

நதியே
என் இளம் நதியே
உன் அலைகளினால்
நீ உரசுறியே!

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலை!

காற்று வந்து
மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ

மூங்கிலுக்குள்
வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ!

சரணம் ‡ 1

மனம் அறை எங்கிலும்
ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே

அலைகளின் ஓசையில்
கிழிஞ்சலாய் வாழ்கிறேன் !

நீயா? கொடுமையா?
நானா? வெறுமையா?
நாமா இனி சேருமா!

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலை

சரணம் ‡ 2

மிக மிக கூர்மையாய்
என்னை ரசித்ததும் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே
என்னுள் வசித்ததும் வார்த்தைதான்

கண்களைக் காணவே
இமைகளும் மறுப்பதா?

வெந்நீரில்  வெண்ணிலா...
கண்ணீரில் கண்ணிலா...
நானும் பெரும் கானலா?

யாரோ மனதிலே 
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலை

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு