தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
மழையில் குளித்த மலர்வனம்- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு மழையில் குளித்த மலர்வனம்  Movie Name  இளைஞன் 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

போராட்டம் என்பது வாழ்க்கையின் மிகமிக சுவாரஸ்யமான அம்சம்.போராட்டத்தில் மட்டும்தான் வலிகள் எல்லாம் சுகங்களாய் மாறுகின்ற அத்வைதம் நிகழும்.போராட்டங்கள் இதயத்தில் ஆயிரம் மடங்கு நம்பிக்கையை ஆழமாய் விதைக்கின்ற நல்ல விவசாயி!

ஞாபகங்கள் படத்தில் நடித்ததன் பிறகு என் கலையுலகப் பாதையே மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடுமோ என்று கேலி பேசியவர்களுக்கும் சரி.. அச்சப்பட்டவர்களுக்கும் சரி.. ஆறுதல் சொன்னவர்களுக்கும் சரி.. என் போராட்டங்களே தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தொடர் மாராத்தான் போராட்டத்தின் விளைவாய் மிகப் பெரிய கூட்டணியில், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்துலக மேதையாம் கலைஞர் அவர்களின் கதை‡திரைக்கதை‡ வசனத்தில், சூப்பர் ஸ்டார்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், இளைஞன் என்னும் திரைப்படத்தில் நடிக்கின்ற அபரிமிதமான வாய்ப்பு கிடைத்தது. 2010 சனவரியில் ஒப்பந்தமானது பணி!

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற இந்நாள் வரைக்கும் போராட்டங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள இயலாத உழைப்பாக, இறுதி சொட்டு வேர்வை இருக்கும் வரை பணியாற்ற தூண்டிய படைப்பாக, ஒரு மகா ருத்ர நம்பிக்கையை இதயத்தின் நான்கு அறைகளிலும் பூரணமாக பூட்டிக் கொண்டு, செயல்பட வைத்த சக்தியாக என்னுள் கனன்று கொண்டிருக்கிறது.

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதோ, அதில் நடிப்பதோ, திரைப்படம்  வெளியிடும் பணிகளில் ஈடுபடுவதோ எல்லாமே இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். இளைஞன் திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் கலைஞர் அவர்களின் முழுமையான ஆதரவோடும், தயாரிப்பாளர் எஸ்.மார்ட்டின் அவர்களின் அளவுகடந்த ஒத்துழைப் போடும், இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா அவர்களின் நூறு சதவிகித வழித்துணையோடும் நான் களம் இறங்கியிருக்கிற  இரண்டாவது நடிப்புலக பயணம்.

ஞாபகங்கள் திரைப்படத்தில், என்னுடைய குறைபாடுகளாக என்னை ஆழமாய் நேசிப்பவர்கள் கூறியவற்றை மட்டும் மிகத் துல்லியமாய் சேகரித்து, அவற்றை மிகத் தெளிவாய் நீக்கிவிட்டு இந்தப் படத்திலே பயணித்திருக்கிறேன். இதனுடைய முழுமையான வெளியீட்டிற்காக செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து எதுவும் இப்போது நான் பேசப்போவதில்லை. காரணம்.. படம் பேசும் என்கிற நம்பிக்கை எனக்குள் நாடிநரம்புகளில் எல்லாம் ஊறிக் கிடக்கிறது.

நீண்ட காலத்திற்குப் பிறகு, நான் முழுமையாய் ஆத்மார்த்தமாய், என்னை ஐக்கியப் படுத்திக்கொள்ள ஏதுவாய் அமைந்த படம் இளைஞன்! ஒரு பாடலாசிரியனாய் இதில் எனது பயணம் மிக அழுத்தமானதாகவே அமையும் என்று நம்புகிறேன். ஒரு  பாடலாரிசியனுக்கு இப்படிப்பட்ட பிரம்மாண்ட கதைக்களமும், மகா சுதந்திரமும், ஆளுமை மிக்க இசையும், புதுமை நோக்கு எண்ணங்கள் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்துவிட்டால், அக்கவிஞனைப் போல் மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஒரு பெரிய மலர்களின் வனாந்தரம்! ஒன்று இரண்டல்ல.. கோடிக்கணக்கில் பூத்துக் கிடக்கும் டியூலிப் தோட்டம்! ஹாலந் நாட்டில் பரந்து கிடக்கும் பரவசமூட்டும் பூக்களுக்கிடையே ஒரு பாடல்! இசையமைப்பாளர் வித்யாசாகர் பூரித்துப்போய் லண்டன் சிம்பொனி இசைக்கலைஞர்களோடு இணைந்து பதிவு செய்து தந்த மெலடியின் உச்சம்!

கவிதையாய் இப்படி எழுதினேன்.!.

    மழையில் குளித்த மலர்வனம்! 
    மாலை நேரக் கடல் நிறம்!
    ஒற்றைக் கவிதைவெண்ணிலா!
    அற்றைப் பூக்களின் திருவிழா!
    அடடா அழகு.. அழகு..
    அதுதான் அழகுஅழகு!

அடுத்த கட்டம், இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது  என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒருபாடல்! எனவே இதை படமெடுக்க ரோம், வென்னீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று  முடிவெடுத்தோம்.

பாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின!

ஆண்:     ஒரு நிலா.. ஒருகுளம்!
    ஒரு மழை.. ஒரு குடை!
    நீ‡நான் போதும் ஒரு விழா!

பெண்:     ஒரு மனம்.. ஒரு சுகம்!
    ஒரு இமை.. ஒரு கனா!
    நீ‡நான் போதும் ஒரு யுகம்!

ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை துரிதமாய் நகர்த்துவதற்கு சில இடங்களில் பரபரப்பாய் பாடல் தேவைப்படும்! படையப்பாவில் வெற்றிக்  கொடி கட்டு என்ற பாடல் போல!

இளைஞன் திரைப்படத்திலும் ஒரு பாடல் துரிதமாய் சூழலை ஒட்டி கதையை நகர்த்துவதற்கு தேவைப்பட்டது. கலைஞர் அவர்களின் கதை அப்படியயாரு பாடலைக் கேட்டது! 

வித்யாசாகர் தன் இசையின் நரம்புகளை மீட்டிவிட, உள்ளர்த்தமும், உண்மையும், உயர்ந்த வேகமும் கொண்ட மெட்டு பிறந்தது. எழுதினேன்..!

நீயா.. நீயா.. நீயேதானா.. எனும் பாடல்!

அதில் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆதிக்க வர்க்கம் செலுத்தும் அராஜக வன்முறையை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாய் அப்பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருந்தேன். வரிகளைக் கேட்ட இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் இதயம் பூரித்தது. பாமர மக்களின் வியர்வையைக் காய்ச்சி பழரசம் குடிக்கும் நிலப்பிரபுக்களை எதிர்த்த ஒரு பாடல் இது!

    எத்தனைக் காலம்
    எத்தனைப் பொழுது
    ஊமைகளாகி உழல்வதோ?

    உழைப்பவன் கண்ணீர்
    உறஞ்சிடும் உலகம்
    சுகமாய் இங்கு சுழல்வதோ?

அடுத்து, நான்காவதாய் ஒரு பாடல்!

நளினமானதொரு பாடல்! மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிய இசையை உறிஞ்சியயடுத்து, தமிழ் ரசனைக்கு ஏற்றவாறு, சிற்சில லய மாற்றங்களைச் செய்து, வார்த்தைகளைக் கேட்டார் வித்யாசாகர். முதல் வார்த்தையாக இமைத் தூதனே என்று அமைத்தேன்! இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா ஆரத்தழுவிக் கொண்டார். தன் அன்பின் மழையை ஒரு கடிதமாகவே எழுதி எனக்குத் தந்தார்.

இமைத்தூதனே பாடல், கேட்பவர்களின் இருதயத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் துளாவி நுழைந்து, ஒட்டிக் கொள்ளப் போவது உறுதி என்ற நம்பிக்கை முதன் முறையாக பிறந்தது ஒரு பாடலாசிரியன் என்கிற முறையில்!

    இமைத்தூதனே!
    இமைத்தூதனே!
    நீ பார்த்தால் நெஞ்சில் பனிக்காலம்! 
    இதழ்த் தோழனே!
    இதழ்த் தோழனே!
    நீ பேசும் பொழுது இசைக்காலம்!

    நீ எனது நிலாக்காலம்!
    என் விழியில் கனாக்காலம்!
    நீ விலக வினாக்காலம்
    கை கலந்தால் விழாக்காலம்!
இளைஞன் திரைப்படத்தின் இறுதிப்பாடல்! க்ளைமேக்ஸ்! இந்தப் பாடலுக்காக நாங்கள் பிரயர்த்தனப் பட்டது. கொஞ்சம் நஞ்சமல்ல..10,000 துணை நடிகர்கள். 500 நடனக் கலைஞர்கள்! இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு!

தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு நான்கைந்து கேமரா யூனிட்டும், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய், கலை இயக்குநர் தோட்டாதரணி, நடன இயக்குநர் அசோக் ராஜா, சண்டைப் பயிற்சியாளர் ராக்கி ராஜேஸ், எடிட்டர் வி.டி.விஜயன் என அவ்வளவு பேரின் ஒட்டுமொத்த உழைப்பும் இந்த ஒரு பாடலை எடுத்து முடிப்பதற்குத் தேவைப்பட்டது.

ஒரு பிரம்மாண்ட கப்பலின் பின்னணியில் எனக்கு ஒவ்வொரு பூக்களுமே மாதிரி அமைந்த பாடல் இந்தப் பாடல்தான் என்று இதயத்தின்மீது சத்தியம் செய்து சொல்வேன். தோழா வனம் தூரமில்லை.. தோற்றம் மறைவு காற்றுக்கில்லை! எனும் பாடலில்.

    வீட்டில் தூங்கும் விரலுக்கெல்லாம்
    விண்மீன் கிடைப்பதில்லை;
    தோல்வி என்ற சொல்லில் தேடு
    வெற்றி என்ற சொல்லை!

    வேகம் அதை அள்ளிக் கட்டு!
    சோகம் அதை தூரம் விட்டு!
    வெற்றிக் கொடி ஏற்றிக் கட்டு.. ஏற்றிக் கட்டு!
        என்ற வரிகள நிச்சயம் காற்றலைகளில் எல்லோருக்குமான நம்பிக்கையை விதைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பொங்கலுக்கு வெளியாகும் இளைஞன் திரைப்படத்தின் நம்பிக்கை மிகுந்த பாடல்களை முத்தமிழ்ப் பேரறிஞர் கலைஞர் அவர்களுக்கு நான் சம்ர்ப்பிக்கிறேன்.

படம்            :    இளைஞன்
இசை           :     வித்யாசாகர்
பாடியோர்      :    கார்த்திக், அன்வேஷா

பல்லவி ‡  1

ஆண்:     மழையில் குளித்த மலர்வனம்!
    மாலை நேரக் கடல் நிறம்!
    ஒற்றைக் கவிதை வெண்ணிலா!
    அற்றைப் பூக்களின் திருவிழா!
        அடடா அழகு! அழகு!
        அதுதான் அழகு! அழகு!

பல்லவி ‡ 2

பெண்:    கொஞ்சம் தாராள காதலி!
    புலனின் தேனூற்றும் கொலுசொலி!
    விடிந்தும் விடியாத மார்கழி!
    உலகெங்கும் கேட்கும் தமிழ் மொழி!
        அடடா கனவு! கனவு!
        அதுதான் கனவு! கனவு!

பல்லவி ‡ 3
ஆண்:    ஈரம் உலராத இதழ்ச்செடி!
    இறங்கி முன்னேறும் கழுத்தடி!
    ஒட்டி உடையாத இடைக் குடம்!
    கொட்டி உதிராத கால்த் தடம்!
        அடடா இளமை! இளமை!
        அதுதான் இளமை! இளமை!

பல்லவி ‡ 4
பெண்:    மூடி வைக்காத எழுதுகோல்!
    மூச்சு இல்லாத உணர்வுபோல்!
    அறையில் மிதக்கும் கனவுகள்!
    எழுதி முடியாத கடிதங்கள்!
        அடடா காதல்! காதல்!
        அதுதான் காதல்! காதல்!

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு