தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன்- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன்  Movie Name  நீ வருவாய் என 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

பாட்டுத்துறையில் சாதித்துவிட வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளில் பெற்றோர்களைப் பிரிந்துவந்த மனபாரத்தோடு, கோவைக்கும் கோடம்பாக்கத்திற்கும் இடையே என் ரயில்பயணங்கள் ஏராளனமான முறை கண்ணீர் பிசுக்கையும் வியர்வை வாசத்தையும் சுமந்து தொடர்ந்து கொண்டிருந்தது.

இயக்குநர் திலகம் திரு.கே.பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்து பாடலாசிரியனாய் அறிமுகமான பிறகு, தொடர்ந்து அவர்வசம், கிட்டத்தட்ட மூன்றாண்டு காலகட்டங்கள் திரைப்படப்பாடல் எழுதுவதற்கும் பத்திரிகை பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. உண்மையில் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் என்னை ஒரு முழுமையான சிற்பமாக செதுக்கினார்.

தன்னம்பிக்கையினுடைய சாராம்சத்தை ஒரு துரோணரிடம் இருந்து கற்றுக் கொண்ட ஏகலைவன் போல் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். திரைத்துறையிலே அவர் கடந்து வந்த போராட்டங்கள், திரைக்கதைக்கு அவர் தருகின்ற முக்கியத்துவம், சிறிய வசனம் எழுதுவதற்குக் கூட அவர் எடுத்துக் கொள்கிற ஐக்கியம், இவையயல்லாம் அவர் வசத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட ஏராளமான பாடங்களில் சில!
   
இன்று, ஒரு இசையமைப்பாளர் ஒரு மெட்டினை இசைத்துக் காட்டினால் அந்த மெட்டு இசைத்துக் காட்டப்படுகின்ற நேரத்தில் ஒரு பல்லவியை எழுதிக்காட்ட என்னால் இயலும், இதற்குக் காரணம் இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்களிடம் நான் பெற்ற பயிற்சிதான்!
   
மூன்றாண்டு காலகட்டம் அவர் தந்த மெட்டுக்களுக்கு பாடல் எழுதிப் பழகிப் பழகி, பாட்டும் பல்லவியும் சரணமும் வார்த்தையும் இலக்கியமுமாய் கவிதையுமாய் வாழத் துவங்கிவிட்ட என்னால் ஏராளமான மெட்டுக்களுக்குள் மிக எளிதான வார்த்தைகளை பின்னிப் பிணைக்கின்ற ரசவாதம் பழகிப்போனது.
   
தொடர்ந்து அவர் இயக்கிய வேட்டிய மடிச்சுக் கட்டு என்னும் திரைப்படத்திலும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர், அதன் பிறகு ஒருநாள் என்னை அழைத்து “வெளிவுலகத்திற்கும் நீ பாடல் எழுதி பிரசித்தி பெற வேண்டும். இது நிரந்தரமான குடில் என்று இங்கு தங்கிவிட வேண்டாம்; நிழலுக்கு ஒதுங்குவது எப்போதுமே உன் பயண நேரத்தை விரயப்படுத்தும்” என்று அவரது ஒட்டுமொத்த அன்பையும் அறிவுரையாய் சேர்த்து என் இதயத்திலே எழுதினார்.
   
மீண்டும் எனது சாலை தேய்க்கும் படலம் ஆரம்பமானது. கையிலே டைரியும் எழுதுகோலும் பல்லவியும் பாடல்களும் சுமந்து கொண்டு ஒவ்வொரு  கம்பெனி வாசல்களாய்  ஏறி இறங்கி வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்த காலகட்டம் அது! மிகப்பெரிய போராட்டமான சூழ்நிலை!
   
என் வீட்டாருக்கும் எனக்கும் தூரத்தால்தான் இடைவெளியே தவிர, நாங்கள் அந்த தூரத்தை கடிதத்தால் நிரப்பிக் கொண்டோம். தினம் ஒரு கடிதம் நான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எழுதுவேன். அதற்கு அவர்களும் தினம் ஒரு பதில் எழுதுவார்கள். ஆக, வாரம் ஆறு நாட்களும் நாங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் எங்களைத் தொடர்ந்து வந்து சேர்ந்து கொண்டே இருக்கும், நான் வசித்த வீட்டில் தொலைபேசி வசதி ஏதும் இல்லாத காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரரின் தொலைபேசி வாயிலாகவும் எங்களது உணர்வுகளை பரிமாறிக் கொள்வோம்.
   
சின்னச் சின்ன சந்திப்புகள், சின்னச் சின்ன சிராய்ப்புகள், மனத்தாங்கல் இவை அனைத்தையும் எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் பகிர்ந்து கொள்வேன். அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளும் அப்பாவின் தோள் தட்டித் தருகிற உற்சாகமும் மீண்டும் மறுநாளைய பொழுதுகளில் போராடுவதற்கான எரிசக்தியை எனக்குள் வழங்கும்!
   
வாய்ப்புத் தேடும் காண்டம் வலிமையாய் சென்று கொண்டிருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான் கோடம்பாக்கத்தை நோக்கி பல திசைகளிலும் இருந்து பாடல் எழுதுவதற்காக பறவைகள் போல புதியவர்கள் பலர் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு முன்னமே திரைத்துறையில் நுழைந்து பல அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞரை, பிரசாத் ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜா அவர்களை சந்திப்பதற்காக சென்ற பொழுது சந்திக்க நேர்ந்தது.
   
இசைஞானியை வழக்கம்போல் சந்திக்க முடியாமல் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்திசையில் கவிஞர்.பழநிபாரதி நின்று கொண்டிருந்தார். அந்தநாள், ஒரு புத்தகத்தின் அழகான பக்கம்போல் இன்னும் எனதுஅடிமனதில் ஒட்டியிருக்கிறது.
   
எதிரே வந்து என்னைப் பார்த்தவர், பாடல் எழுத வருகின்ற ஒரு எதிர் போட்டியாளன் என எண்ணிக் கொள்ளாமல், மிகவும் வாஞ்சையோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு, “கடுமையாக முயற்சி செய்யுங்கள்.. உங்கள் படைப்புகளில் அற்புதமான அழகியல் தென்படுகிறது. நல்ல பாடல் அமையும் போது நிச்சயம் பிரபலம் அடைவீர்கள்” என்ற வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
   
சக கவிஞர்களோடு சகஜமாகவும்; எதிர்போட்டியாளனைப் போல கருதிக் கொள்ளாத தன்மையோடு பழகிக் கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை நான் கவிஞர்.பழநிபாரதி அவர்களிடத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.
   
இப்போதும் கூட அவர் எந்தக் கவிஞரைப் பார்த்தாலும் மிக வாஞ்சையோடு பேசுவதும் வார்த்தைகளால் நேசிப்பதும் பிரமிக்கச் செய்கின்ற நெகிழ்ச்சி.
   
பாடல் எழுதுவதற்கு நான் பயன்படுத்திய வியூகம் அசாதாரமானது. ஒரு வெற்றியைத் தேடிச் செல்பவன் சரியானதொரு வியூகத்தை அமைத்துக் கொண்டால்தான் அவனுக்கான ராஜபாட்டையை அடைய முடியும் என்பது என்னுடைய தீவிரமான எண்ணம். அதன் அடிப்படையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருகிற இயக்குநர்களை மாத்திரம் சந்திப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். 
   
எல்லா கம்பெனிகளையும், எல்லா இயக்குநர்களையும், எல்லா தயாரிப்பாளர்களையும் சந்தித்து முக அக அவமானங்களை சுமந்து வருவதைவிட பாடலுக்கு முக்கியத்துவம் தருகிற படைப்பாளிகளைச் சந்திக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்ததும், திரு.விக்ரமன், திரு.வசந்த், திரு. சேரன் என  பத்து  முக்கிய இயக்குநர்களை  தேர்வு செய்து கொண்டேன். அவர்களை தினமும் சென்று சந்திப்பதை வழக்கமாக்கி, ஒரு அட்டவணை தயார்செய்து, அதில் சந்தித்த நபர்களின் பெயர்களை எழுதி டிக் செய்து கொள்வேன்.
   
இப்படியாய் தினசரி யாரை சந்தித்தோம், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை குறிப்பாக அந்த அட்டவணையில் குறித்துக் கொள்வேன். நான் தயாரித்த அட்டவணை ஓரிரு மாதங்களிலேயே எனக்குப் பெரும் பலனை கொடுத்தது.
   
திரு.ஆர்.பி.செளத்ரி அவர்களின்         சூப்பர் குட் ஃபிலீம் என்கிற நிறுவனம் பல  படைப்பாளிகளின் தாகங்களுக்கு வெள்ளந்தியான வேடந்தாங்கல். அங்கே ஏராளமான புதிய முகங்களையும் புதிய படைப்பாளிகளையும் காண இயலும். அங்குதான் முதன்முதலாக இயக்குநர் லிங்குசாமி அவர்களைச் சந்தித்தேன்; இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்களை சந்தித்தேன்; இயக்குநர் ராஜகுமாரன் அவர்களை சந்தித்தேன்; இன்னும் ஏராளமான இயக்குநர்கள், இசையமைப்பாளர்களை நான் சந்தித்தது, வாய்ப்பு கேட்டு சூப்பர்குட் ஃபிலீம் வாசல்களிலே நின்று கொண்டிருந்த நாட்களில்தான்!
   
அப்போது சாலிகிராமத்தில் இருந்த சூப்பர் குட் ஃபிலீம் அலுவலகத்தில் நான்கைந்து இயக்குநர்கள் படம் இயக்கும் பணிகளிலே ஈடுபட்டிருந்தார்கள். ஒரு அலுவலகத்திற்கு சென்றால் நான்கைந்து இயக்குநர்களை எளிதாக சந்திக்க இயலும் என்பதால், வாய்ப்பு கேட்க வருபவர்கள் அங்கே அதிகமாக கூடி வருவதுண்டு. அப்படி வந்தவர்களில் எனக்கு அறிமுகம் ஆனவர்கள்தான் கவிஞர் நா.முத்துக்குமார், கவிஞர்.விவேகா போன்றவர்கள். அவர்களில் இருவரும் அங்கே எனக்கு அறிமுகமானதோடு, அதன் பின்னால் பல மேடைகளிலும் பல அலுவலகங்களிலும்  அடிக்கடி சந்திப்பதற்கு ஏற்றவர்களானார்கள்.
   
இப்படி பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படையயடுப்பு நிலவிய காலகட்டத்தில் ஒரு அபாயகரமான சூழலும் அன்றைய திரைப்படப்பாடலுக்கு நேர்ந்திருந்தது.  அது என்னவெனில், ஒரு மெட்டினை நான்கைந்து கவிஞர்களுக்கு கொடுத்து, அவற்றில் யாருடைய வரிகள் சிறந்ததாக இருக்கிறதோ அவற்றைத் தேர்ந்தெடுத்து உபயோகித்துக் கொள்கிற ஒரு கீழ்த்தரமான மனப்பான்மை புற்றீசல் போல் பரவிக் கொண்டிருந்த காலகட்டம்.  அதில் சிக்கிச் சிதையாத கவிஞர்களே இல்லை எனலாம்.  அதைப்பற்றி இன்னும் வரும் வாரங்களில் விரிவாக கூறவிருக்கிறேன்.
   
அந்த நேரத்தில்தான் இயக்குநர் ராஜகுமாரன் அவர்கள் செய்த ஒரு பேருதவியை மறக்க இயலாது. ஒரு அடையாளம் வேண்டும் என்று அலைபாய்ந்து கொண்டிருந்த எனக்கு, என் பெயரைச் சொல்லி அடையாளப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை நீ வருவாய் என்கிற திரைப்படத்திலே பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன் என்கிற பாடலின் மூலமாக அவர் வழங்கினார்.  அந்தப் பாடலை எனக்கு நானே எழுதிக் கொண்ட பாடலாகக் கருதிதான் எழுதினேன்.
   
அடையாளம் கிடைத்தது.

இந்தப்பாடலை இயக்குநர் திரு.ராஜகுமாரள் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

படம்          :    நீ வருவாய் என
இசை         :     எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியோர்    :    எஸ்.பி.பாலசுப்பிரமணியன்       

பல்லவி

பார்த்துப் பார்த்து
கண்கள் பூத்திருந்தேன்
நீ வருவாய் என!

பூத்துப் பூத்து
புன்னகை சேர்த்திருந்தேன்
நீ வருவாய் என!

தென்றலாக நீவருவாயா?
ஜன்னலாகிறேன்!

தீர்த்தமாக நீவருவாயா?
மேகமாகிறேன்!

வண்ணமாக நீவருவாயா?
பூக்களாகிறேன்!

வார்த்தையாக நீவருவாயா?
கவிதை ஆகிறேன்!

சரணம் ‡ 1

கரைகளில் ஒதுங்கிய
கிழிஞ்சல்கள் உனக்கென
தினம்தினம் சேகரித்தேன்.

குமுதமும் விகடனும்
நீபடிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்.

கவிதை நூலோடு
கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்!

கனவில் உன்னோடு
என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்!

ஒரு காகம் காவென
க ரைந்தாலும்
உன் வாசல் பார்க்கிறேன்!

சரணம் ‡ 2

எனக்குள்ள வேதனை
நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை

எழுதிய கவிதைகள்
உனைவந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை

உலகில் பெண்வர்க்கம்
நூறு கோடியாம்
அதிலே நீயாரடி?

சருகாய் அன்பேநான்
காத்திருக்கிறேன்
எங்கே உன்காலடி?

மணி சரி பார்த்து
தினம் வழி பார்த்து
இருவிழிகள் ஏங்குது

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு