தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு  Movie Name  வெற்றிக்கொடி கட்டு 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

ஒரே ஒரு அடையாளம்! ஒரே ஒரு அங்கீகாரம் போதும்! திசைகளின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்ற எண்ணம் பொதுவாக எல்லாத் துறைகளிலும் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் இளைஞனுக்குள் ஏற்படுகின்ற உணர்ச்சி!

ஆனால் அந்த ஒரே ஒரு அடையாளத்தை.. ஒரே ஒரு அங்கீகாரத்தைப் பெற்ற  பிறகுதான் தெரியும் தொடர்ச்சியாய் அப்படிப்பட்ட அங்கீகாரங்களும் அடையாளங்களும் நம்மை தொடர்நது கொண்டே இருக்க ¼வ்ண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் தள்ளப்படுகிறோம் என்கிற நிஜம்! பிறகு அதற்காக அந்தப் போராட்டங்கள் வளர ஆரம்பிக்கும்.

அடுத்ததாய் சுடுகின்ற நிஜம்.. கிடைத்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம்.  இதற்கு முந்தையப் போராட்டங்களை எல்லாம்விட மிகமிக கடிதனமான ஒன்று!

இந்த மூன்று கட்டங்களிலும் நான் பயணம் செய்து வந்திருக்கிறேன். முதற்கட்டத்தில் ஒரேஒரு அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தேடி  பயணப்பட்டப் பொழுதுகளில் நீவருவாய் என, வானத்தைப்போல போன்ற போன்ற திரைப்படப் பாடல் வெற்றிகள் எனக்கு அப்படிப்பட்ட முகவரியைத் தந்தன,

ஒருநாள் மதியப் பொழுதில் என்னுடைய சித்தப்பா குணசேகரன் அவர்களின் இல்லத்திலே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கார் வந்தது.

அந்தக் காரில் இருந்து இறங்கி வந்த உதவி இயக்குநரின் பெயர் ராமகிருஷ்ணன்.  சமீபத்தில்கூட கும்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். அப்போது அவர் உதவி இயக்குநர்.

ராமகிருஷ்ணன் எனது அறைக்குள் வந்து உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினார். அதிர்ச்சியுடன் நான் எழுந்து உட்கார்ந்தேன். 

காரணம்..

அங்கே ராமகிருஷ்ணனை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர் எனக்கு இதற்கு முன்பே நன்றாகத் தெரியும். அவரோடு நான் அறிமுகமானது, தமிழ்ச் சினிமாவின் சத்யஜித்ரே என்று நான் அடிக்கடி குறிப்பிடுகிற இயக்குநர் சேரன் அவர்களின் இல்லத்தில்.

பாடல் எழுதுவதற்கான போராட்டங்களில் நான் ஈடுபட்டிருந்த போது, அடிக்கடி நான் சென்று வாய்ப்பு கேட்டவர்களில் இயக்குநர் சேரன் மிகமிக முக்கியமானவர். பொற்காலம், பாரதி கண்ணம்மா போன்ற அவரது மனித உணர்ச்சி காப்பியங்களைப் பார்த்து,  தமிழ் சினிமாவை தவமாய் கருதுகிற ஒரு இயக்குநரின் படைப்பிலே பங்களிப்புபெற்றிட வேண்டும் என்கிற தீராத வேகத்தோடு அவரை அணுகி நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். 

ஒருமுறை அவருடைய இல்லத்திலே அவரை சந்தித்தேன். மேல் சட்டை அணியாமல் மிக சாதாரணமாக ஒரு லுங்கியை அணிந்து கொண்டு ஹாலில் கீழே உட்கார்ந்தபடி உதவி இயக்குநர்களோடு பேசிக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தேன்! வரவேற்று என்னை சோபாவில் இருக்கச் செய்தார். 

அவரிடம் சென்று என்னுடைய தேடலைப் பற்றிக் கூறி, இதற்கு முன்பு நான் எழுதிய பாடல்களைப் பற்றிச் சொல்லி,  தொடர்ச்சியாக அப்போதுநான் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழிலே எழுதி வெளிவந்திருந்த உடைந்தநிலாக்கள் எனும் என்னுடைய வரலாற்றுக் கவிதைத் தொடர் புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தேன். 

இயக்குநர் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டேன் என்கிற ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது.  அவர்மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்த இயக்குநர் சேரன், என்னை மிக வாஞ்சையோடும் நேசத்தோடும் நடத்தினார். தொடர்ச்சியான சந்திப்புகளில் ஒரு தோழமை உணர்ச்சியோடு பழகத் தொடங்கினார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில், உடைந்த நிலாக்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு இயக்குநர் சேரன் அவர்களின் மனைவி மிக நெகிழ்ந்துபோய் அதைப்பற்றி சேரன் அவர்களிடம் சொல்ல,  அவரும் அதைப் படித்துவிட்டு   ஓர் இரவு முழுக்க உறங்க முடியாமல் தவித்ததையும்; கண்களிலே கண்ணீர் ததும்பிக் கொண்டு வந்ததையும்; அந்தப் புத்தகத்திற்குள் புதைந்து கிடந்த எத்தனையோ காதல் கவிதைகளில் லயித்துக் கிடந்ததைப் பற்றியும் விரிவாக என்னிடம் விழிகளில் ஒருவித பிரமிப்போடு கூறினார்.  கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது பாடல் எழுதும் வாய்ப்பினைத் தருகிறேன் என்றவர் தந்த வாக்கை உதவி இயக்குநர் ராமகிருஷ்ணனை அனுப்பி நிஜமாக்கினார்.

டைரக்டர் சேரன் சார் உங்களை கூப்பிட்டு வரச் சொன்னார். பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கிறார் என்ற வாசகம் எனக்குள் அப்போது அத்தனை இரத்த அணுக்களிலும் பெரிய தித்திப்புத் திசுக்களைத் திருப்பிவிட்டது.

பெரும் எதிர்பார்ப்போடு பெரிய நம்பிக்கையோடு புறப்பட்டேன் பிரசாத் ஸ்டூடியோவிலே.. தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையமைக்கும் அறைக்குள்ளே! தயாரிப்பாளர் சிவசக்திப்பாண்டியன் அவர்கள் உட்பட எல்லோரும் அமர்ந்திருக்க, தமிழ் சினிமாவின் சரித்திரப் பதிவில் முக்கியத்துவம் பெற்ற அந்தப்பாடலுக்கான மெட்டு எனக்கு வழங்கப்பட்டது.

அந்த மெட்டினை எனக்குத் தந்த இயக்குனர் சேரன் அவர்கள், இந்தப் பாடல் எழுதி, குறிப்பாக நான் எதிர்பார்க்கும் அளவிற்கு எழுதிவிட்டீர்களென்றால், தமிழ்ச் சினிமாவின் அடுத்த தலைமுறை கவிஞர்களின் வரிசையில் நீங்கள் வந்துவிடுவீர்கள் என்ற வாசகத்தை உதிர்த்து அந்த கேசட்டினைக் கொடுத்தார். 

சூழ்நிலையை விளக்கினார்.  மற்ற பாடல்கள் எழுதுவதுபோல் இது அவ்வளவு சுலபம் அல்ல.. கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்தோ, காதலை சொல்ல முடியாமல் தவித்தோ, சொன்ன காதலை திரும்ப வலியுறுத்தியோ உருவாக்கப்பட்ட சூழல் அல்ல இது.

கறுப்பாக இருக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், கறுப்பு என்பது தாழ்வுமனப்பான்மையின்  நிறம் அல்ல.. அது தமிழ் இனத்தின் நிறம்; தலை நிமிர்வின் நிறம்!

கறுப்பு என்பது அமங்கலம் அல்ல.. ஆற்றலின் நிறம்! கறுப்பு என்பது அழகுக்கு எதிரான நிறமல்ல.. அது பேரழகின் பதிவு! என்பன போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய  ஒரு பாடலாக அது உருவாகி வரவேண்டும் என்று தன் உள்ளத்திற்குள் ஊறிக்கிடந்த எண்ணங்களை எனக்குத் தெளிவு படுத்தினார்.

மெட்டினை உள்வாங்கி கேட்க கேட்க, தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் அந்தப் பாடலுக்கு எத்தனைப் பிரயர்த்தனப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவ்வளவு பேரும் அந்தப் பாடலை சிலாகித்து; அந்த மெட்டினை கொண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இயக்குநர் சேரன் அவர்கள் சொன்னது போல ஏனைய பாடல்கள் எழுதுவதுபோல் இப்பாடல் எழுதுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை என் இருதயம் புரிந்து கொண்டது. 

இதற்கு நிறைய தேடல் தேவை! இதற்கு எனக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஏராளமான தாகங்களை ஒருபுள்ளிக்குள் குவித்தால் மாத்திரமே இந்தப்பாடல் எழுதுவது சாத்தியம் என்ற உணர்ச்சிகள் அடுக்கடுக்காய் இதயத்திற்குள் மேல் எழும்ப, எப்படிப்பட்டத் தேடல்களை எல்லாம் நாம் மேற்கொள்ளலாம் என்று வரிசைப்படுத்தினேன்.

ஒவ்வொரு துறை சார்ந்த கறுப்புகளையும் பிரித்தெடுப்போம் என்ற பட்டியல் நுணுக்கத்தோடு, அறிவியல், வரலாறு, மருத்துவம், இலக்கியம், சமூகம், அழகியல் என எல்லாத் துறைகளிலும் கறுப்பு சார்ந்த விசயங்களையும் கறுப்பு சிறப்படைந்த அம்சங்களையும் தொகுக்கலானேன். 

நூலகங்களில் அறிவு சார்ந்த புத்தகங்களில் இருந்து ஏராளமான தகவல்களைத் தொகுத்தேன்.  அதோடு நின்றுவிடாமல் ஒரு மருத்துவரைச் சந்தித்து நான் எங்கோ படித்ததை தெளிவுபடுத்திக் கொண்டேன். தாயின் கருவறையும் கறுப்புதான் என்கிற வரி எனக்கு அங்கிருந்துதான் பிறந்தது.

அதைப்போலவே, கறுப்பு என்பது நிறம் ஆதலால் நிறத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஓவியர்களின் பங்களிப்பையும் பெறவேண்டுமென்ற விருப்பத்தோடு புகழ் பெற்ற ஓவியர்களான ம.செ., ஜெயராஜ், ஷ்யாம் போன்றவர்களோடு உரையாடி  கறுப்பு பற்றி ஓவியர்கள் என்ன கருதுகிறார்கள் என்ற தகவலையும் பெற்றுக் கொண்டேன். 

க்ளியோபாட்ரா கறுப்பு என்பதில் இருந்து  கஸ்தூரி மஞ்சள் கறுப்பு என்பது வரைக்கும்; காமராஜர் கறுப்பு என்பதில் இருந்து குறுங்கடுகு கறுப்பு என்பது வரைக்கும் எல்லா பாதையிலும் கறுப்பின் சிறப்புகளை, கறுப்பின் நுட்பங்களைக் கவிதையாய் தொகுத்து எனக்கு தரப்பட்ட மெட்டுக்குள் பிரவேசிக்கச் செய்தேன்.

கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட கறுப்புகளை பாடலாய் வடித்து இயக்குநர் சேரன் அவர்களை அலுவலகத்திலே சந்தித்தேன்.  பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த அவர் நான் கொடுத்த கோப்பை வாங்கிப் பார்த்து ஒரே மூச்சில் அத்துனை பக்கங்களையும் சளைக்காமல் படித்து முடித்தார்.

படித்து முடித்தவரின் கண்கள் ஓரத்தில் கசிந்திருந்தது சில துளிகள்.  அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறோம் என்ற உணர்ச்சியை அந்தத் துளிகள் எனக்கு அறிமுகம் செய்தன. என் கரம் பற்றி மிக அழுத்தமாய் குலுக்கியவர் தன் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் நட்பின் வார்த்தைகளால் என்மீது நனைத்தார்.

அந்த நொடியை இப்போது நினைத்தாலும் நூறு வானவில்கள் ஒன்றாகி என்மீது சிறகை விரிக்கின்றன. 350 கறுப்புகளில் இருந்து மிகச் சிறப்பானவைகளை தேர்வு செய்து, கதைப்படி ஒரு கிராமத்திலிருந்து பாடக்கூடிய ஒரு பெண் அவளுடைய அறிவிற்கு அவளுடைய வாழ்வியல் முறைக்கு  எந்த அளவிற்குப் பாடினால் சரியாக இருக்குமோ, பொருத்தமாக இருக்குமோ அதேநேரத்தில் ரசனைக்கு உரியதாகவும் காதலோடு கலந்ததாக இருக்குமோ அவற்றை மட்டும் தேர்வுசெய்து ஒரு பாடலாய் தொகுத்துத் தரச்சொன்னார். செய்து கொடுத்தேன்.

தேனிசைத் தென்றல் தேவா அவர்களும் கறுப்பின் வரிகளை சிலாகித்துப் பாராட்ட அந்த நொடியில் எனக்குத் தெரியாது, அது சன் டிவியில் மாத்திரம் பதினைந்து வாரங்கள் டாப் 10ல் முதலிடம் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறப் பாடல் என்று!      உலகத் தமிழர்கள் வாழும் திசையயங்கிலும் சிம்மாசனமிட்டு அமரப் போகிறப் பாடல் என்று! இந்தப் பாடல்தான் என் அடையாளத்தை அங்கீகாரத்தை தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப் போகிறப் பாடல் என்று!

வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் இடம்பெற்ற கறுப்புதான் எனக்குப்புடிச்ச கலரு  ஒரு ராட்ச­த்தனமான வெற்றியை எனக்குத் தேடிக் கொடுத்தது. இந்தப் பாடலை இயக்குநர் சேரன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

படம்    :    வெற்றிக்கொடி கட்டு
இசை    :     தேவா
பாடியோர்    :    அனுராதா ஸ்ரீராம்

பல்லவி

கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு ‡ அவ
கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தவு­ன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு!

கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு

கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு ‡ அவ
கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தவு­ன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு!

சாமி கறுப்புத்தான் ‡ சாமி
செலையும் கறுப்புத்தான்
யான கறுப்புத்தான் ‡ கூவும்
குயிலும் கறுப்புத்தான்,

என்ன ஆசப்பட்டு
கொஞ்சும் போது
குத்துற மீச கறுப்புத்தான்!

அசத்தும் கறுப்புத்தான்!

கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு ‡ அவ
கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தவு­ன் வாட்ஸ் பவரு
கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு!

சரணம் ‡ 1

வெண்ணில உலகம் பார்க்க
வச்ச இரவு கறுப்புத்தான்
வேர்வ சிந்தி உழைக்கும்
அந்த விவசாயி கறுப்புத்தான்

மண்ணுக்குள்ள இருக்குறப்போ
வைரங்கூட கறுப்புத்தான்
மதுரவீரன் கையில் இருக்கும்
வீச்சருவா கறுப்புத்தான்

பூமியில மொதமொதலா
பொறந்த மனு­ன் கறுப்புத்தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும்
அந்த மழை மேகம் கறுப்புத்தான்

ஒன்னயயன்ன ரசிக்க வச்ச
அ...

ஒன்ன என்ன ரசிக்க வச்ச
கண்ணு முழி கறுப்புத்தான்
கற்பு சொல்லித் தந்தாள்
அந்த கண்ணகியும் கறுப்புத்தான்

தாய் வயிற்றில் நாமிருந்த....

தாய் வயிற்றில் நாமிருந்த
கருவறையும் கறுப்புத்தான்
வணங்கும் கறுப்புத்தான்

சரணம் ‡ 2

ஒன்ன கண்ட நாள் மொதலா
வச்ச பொட்டும் கறுப்புத்தான்
ரெட்டச்சடை பின்னையில
கட்டுற ரிப்பன் கறுப்புத்தான்

பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கறுப்புத்தான்
அன்று முதல் எனக்குத்தான்
பூக்கள் மீது வெறுப்புத்தான்

பாவட கட்டிக்கட்டி
பதிஞ்ச தடம் கறுப்புத்தான்
முத்தம் கேட்டுக் காத்திருக்கும்
அந்த இடம் ஒனக்குத்தான்

ஒன்னப் பொத்தி வச்சிருக்கும்..
அ...

ஒன்னப்பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சுக்குழி கறுப்புத்தான்
ஊரறிய பெத்துக்கனும்
புள்ள பத்தும் கறுப்புத்தான்

நம்மூரு சூப்பர் ஸ்டாரு...

நம்மூரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிக்காந்தும் கறுப்புத்தான்!
அழகும் கறுப்புத்தான்.

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு