தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா  Movie Name  உள்ளம் கொள்ளை போகுதே 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

ஆரம்பகால கட்டங்களில் என்னை மிகப்பெரிய அங்கீகாரப்படுத்திய இயக்குநர்களில் ஒருவர், இன்றைய இயக்குநரும் நடிகருமான இனிய நண்பர் சுந்தர்.சி அவர்கள்.

பாடல் எழுதவந்த புதிதில் மிகநீண்ட போராட்டங்களில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கையில் அன்புக்கரம் நீட்டி அரவணைத்தவர்களில் இயக்குநர்கள் ராஜ்கபூர், ராஜகுமாரன், விக்ரமன், சேரன் ஆகியோர்களில் இயக்குநர் சுந்தர்.சி முக்கியமானவர். அவருடைய திரைப்படங்களில் நான் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள், அவர் இயக்குகின்ற அத்தனைத் திரைப்படங்களிலும் பெரும்பான்மையான பாடல்கள், குறைந்தபட்சம் நான்கு பாடல்களாவது அதில் இடம்பெற்றிருக்கும். அவரோடு நடந்த முதல் சந்திப்பு மிகமிக சுவாரஸ்யமானது.
   
அவருடைய அலுவலகம் வடபழனியில் இருந்தபொழுது, அடிக்கடி சென்று வாய்ப்பு கேட்பதற்காக அவரை சந்திப்பதுண்டு. அன்றைய சூழலில் எனக்கு அங்கே நிறைய இனிய நண்பர்கள் அறிமுகமானார்கள்.

இன்றைய படிக்காதவன்’ திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ், திருவிளையாடல்’ படத்தை இயக்கிய பூபதி  பாண்டியன், மாயாவி திரைப்படத்தை இயக்கிய சிங்கம்புலி மற்றும் இயக்குநர் செந்தில் ஆறுமுகம் போன்ற பலர் எனக்கு அங்கே அறிமுகமாகி, பின்னாளில் அவர்கள் படங்கள் இயக்கும் போது எனக்கு பாடல்கள் வழங்கிய நண்பர்கள்.    

சினிமாவே இப்படித்தான் உதவி இயக்குநர்களின் வட்டத்தில் இருந்துதான் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்.
   
ஒரு பழைய கசங்கிப்போன அறைக்குள் ஏராளமான பிரம்மாண்ட கனவுகளை அலங்கார லட்சியங்களை தாங்கிப் பிடித்துக் கொண்டு எத்தனையோ உதவி இயக்குநர்கள் உலாவந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு பெரும் நட்பு வளையத்தை  பெற்றிருக்கின்ற ஒரு சினிமாவாசி நல்ல திறமையாளனாக இருப்பானேயயனில், நிச்சயம் பின்நாட்களில் அந்த நட்பு அவனுடைய உயரத்தை தினசரி ஒரு செண்டிமீட்டராவது உயர்வதும். 
   
அந்த வரிசையிலே, ஊரில் இருந்து வந்த நண்பர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. வந்தவர், நீண்டநாட்கள் சோர்வான முகத்தோடு காணப்பட்டார். கையில் இருந்த பழைய டைரியை என்னிடம் நீட்டினார். பார்த்தேன். நிறைய கவிதைகள், பாடல்கள் எழுதப்பட்டிருந்தன.

என்னை பார்த்தவர்,நானும் உங்களைப்போலே திரைப்படப்பாடல்கள் எழுத முயற்சித்து வருகிறேன். எங்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதிய பாடல்களை உங்களுடைய பாடல்களைப் போலே உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் எனக்கு ஏதாவது சன்மானம் பெற்றுத் தந்தால்  போதும்’என்று சொன்னார்.
   
அந்த நிகழ்வு சன்மானத்திற்காக தன்மானத்தை விட்டுத்தருவது போலத்தான் எனக்குப் பட்டது. வறுமையின் காரணத்தால்தான் அவர் அப்படிச் செய்கிறார் என்றாலும் கூட, படைப்பை இன்னொருவன் பெயருக்கு விற்க முற்பட்டதை என்னுடைய இருதயத்தால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. நிதானத்தை இழந்து அவரை கண்டபடி திட்டிவிட்டேன்.

இப்போது நினைத்தாலும் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்படி திட்டியிருக்கக் கூடாது; வெறுமனே புத்திமதி சொல்லி அனுப்பியிருக்கலாம் என்று! அவருக்கு பொருளுதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு அக்கணத்தில் ஏற்படவில்லை.

காரணம்..!

தன்னுடைய படைப்பை இன்னொருவன் பெயருக்கு அடமானம் வைக்கின்ற காரியம் என்பது தற்கொலையைப் போல மிக அவமானமான மரணம்.
   
அடிக்கடி என்வீட்டிற்கு சில தபால்கள் வருவதுண்டு. இப்படி ஏதாவது சிலர் தங்களது பலகீனத்தை கடிதங்களில் எழுதி பாடல்களை விற்பதற்கு அனுப்பி வைப்பார்கள்.  அவற்றை பத்திரமாக படித்துக்கூட பார்க்காமல் ரிஜிஸ்டர் தபாலில் திருப்பி அனுப்பி விடுவதுண்டு. இது எனக்கு மட்டுமல்ல.. என் துறை சார்ந்த ஏனையோருக்கும் ஏற்பட்டிருக்குமென நான் நினைக்கிறேன்.
   
இந்தத் தன்மைக்கு காரணம்.. தீவிரமாக முயற்சிக்காமையே என்று நான் சொல்ல மாட்டேன்; திட்டமிட்டு முயற்சிக்காமையே காரணம் என்றுதான் சொல்வேன்.
   
பொதுவாகவே, எழுதும் ஆர்வமிக்க பலருக்கும் திரைப்படத் துறையிலே நுழைந்து பிரகாசிக்க வேண்டுமென்ற அழுத்தமான எண்ணங்கள் உண்டு. இல்லையில்லை..

நான் சுத்த பிரம்மச்சாரி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, உள்ளே பெண்களின் ஆபாசப் படங்களை வைத்து ரசிப்பவன் போல பலர் இங்கே இருக்கிறார்கள்.

வெளியே திரைப்படத்தைப் பற்றியும், திரைப் படைப்புகள் மற்றும் பாடல்கள் பற்றியும் மேடை மேடையாய் விளாசுவார்கள்; பத்திரிகை பத்திரிகையாய் விமர்சிப்பார்கள். ஆனால், ஆழத்தோண்டிப் பார்த்தீர்களென்றால் அப்படி விளாசியவர்களும் விமர்சித்தவர்களும் ஒருகாலத்தில் திரைத்துறையில் பாடல்கள் எழுதவோ, திரை படைப்பை படைக்கவோ முயற்சித்து, முடியாமல் தோற்றுப்போய் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைக்குப் பொருத்தமானவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
   
சமீபத்தில்கூட ‘திரைப்படப்பாடல் சமூகத்திற்கு நல்லதா? கெட்டதா?’ என்ற தலைப்பிலே இனிய நண்பர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் தொலைக்காட்சியிலே மிக பிரபலமாக நடந்தது.

பட்டிமன்றத்தின் தீர்ப்பாக லியோனி அவர்கள் என்னுடைய ஒவ்வொரு பூக்களுமே’ பாடலைக் குறிப்பிட்டு  திரைப்படப் பாடல்கள் நல்ல பாதையில்தான் செல்கின்றது என்ற தீர்ப்பை அளித்தார்.
   
திரைப்படப் பாடல்கள் குறித்த விமர்சனம் எழுப்பும் விமர்சகர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திரைப்படப் பாடல் என்பது ஐந்தாம் வேதம் அல்ல..! அது முழுக்க முழுக்க ஜனரஞ்சகத் துவத்திற்காக படைக்கப்படுகின்ற ஒரு படைப்பு.

திரைப்படத்துறை என்பது ஒரு சந்தை. அந்த சந்தையிலே மீன் கடையும் இருக்கும்; பூக்கடையும் இருக்கும்.   மீன் வாங்க வருபவர்கள் அங்கே அடிக்கின்ற மீன் நெடியை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். பூ வாங்க வருபவர்கள் அங்கே கமழ்கின்ற நறுமணத்தை சுமந்து கொண்டே செல்லலாம். 
   
இந்த இருவேறு துருவ ரசனைகளும் திரைப்படத் துறைக்குள்ளே நிகழ்வதால், திரைப்படப் பாடல்கள் ஏறி இறங்கி, தாழ்ந்து உயர்ந்துதான் பயணப்பட வேண்டிய சூழல். 

அந்த சூழலிலே பாடல் வந்த எனக்கு இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் நட்பு பக்கபலமாக அமைந்தது.  சென்னையை ஒட்டியுள்ள ஐடியல் பீட்ச் என்கின்ற கடற்கரை விடுதிக்கு என்னை  அழைத்துச் சென்றவர், இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வர் கார்த்திக் ராஜாவை அறிமுகம் செய்து வைத்தார்.
   
கார்த்திக் ராஜாவிற்கு ஒரு அலாதியான திறமை. மிகச்சிலருக்கு மாத்திரமே வாய்த்தவொரு  திறமை. பாடலுக்கு மெட்டமைக்கின்ற அற்புத வித்தை அவருடைய விரல்களுக்கு வரும். ‘

உள்ளம் கொள்ளை போகுதே’ என்கின்ற திரைப்படம். நான் எழுதிய பாடல்களிலேயே என் உள்ளத்திற்குள் உறங்காமல் விழித்துக் கொண்டே இருக்கிற அற்புதமான கவிதை நயமிக்க வரிகள் அந்த படத்திற்காக நான் எழுதினேன். இனிய நண்பர் முகில் அவர்களுடைய கதையில் அந்தத் திரைப்படத்தை இயக்கினார் சுந்தர்.சி.
   
கதை சொல்லச்சொல்ல ஒவ்வொரு காட்சிக்கும் காட்சிக்கும் பாடல் தேவைப்பட்டது. கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிற்கும்  ஒரு கவிதைத் துணுக்கு இசை வடிவத்திலே அவசியப்பட்டது.

அங்கங்கே பாடல்கள் வைக்கலாம். பாடல்கள் நிரம்பிய படமாக மாற்றலாம் என்கின்ற என்கருத்தை சுந்தர்.சி அவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு என்னை அங்கேயே அப்பொழுதே எழுதித்தரச் சொன்னார்.
   
கதைக்கு ஏற்ற சூழலுக்கு உடனடியாக கவிதை  கவிதையாய் நான் எழுதிக் கொடுக்க, கார்த்திக் ராஜா அவர்கள் அதை ஆசை ஆசையாய் வாங்கி அப்போதைக்கு அப்போதே மெட்டமைக்கத் துவங்கினார்.

ஒரேநாளில் ஒன்பது பாடல்கள்! ஐந்து பெரும்பாடல்கள்! நான்கு குறும்பாடல்கள்! என ஒரேநாளில் அத்தனைப் பாடல்களுக்கும் அந்த கடற்கரையோர அலைகளின் தாலாட்டுச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே மெட்டமைத்து முடித்தோம்.
   
அதில் கவிதைகள் ‘ சொல்லவா? உன்பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!’என்கின்ற பாடலில் இருந்து அன்பே! அன்பே! என் கண்ணில் நீதானே! மூச்சுக்காற்றில் நான் வந்து வெளியே செல்வேன் சரிதானே!’ என்ற பாடல் வரைக்கும், நெஞ்சம் நிறைந்த கவிதை வரிகளால் அந்த படத்தை நிரப்ப முடிந்தது.
   
இன்னொருவனுடைய பெயரிலே வாழ்ந்து கொண்டு தன்னுடைய காதலை உள்ளுக்குள்ளே மறைத்து அந்த கதாபாத்திரம் படுகின்ற காதல் வலிகளை ‘உண்மையில் நானொரு கடிகாரம்; ஏன் சுற்றுகின்றோம் என்று தெரியாமல் தினம் சுற்றுதம்மா என் வாழ்வும் என்ற வரிகளின் மூலமாகவும்;‘ காதல் ஒரு பரிட்சைதானே எழுதிடவே நானும் வந்தேன், இன்னொருவர் பெயரில்தானே தேர்வெழுதிச் சென்றேன்’ என்ற வரி வரைக்கும் இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் என்னைப் பார்த்தால் சொல்லிச் சொல்லி சிலாகிக்கின்ற வரிகள்.
   
திரைப்படத்துறையில் எப்போதாவதுதான் இப்படி அத்திப்பூத்தாற்போல் கவிதைகளை  திரைப்படப்பாடலுக்குள்  நிரப்பும் சந்தர்ப்பம் கிடைக்கும்.  அப்படியயாரு சந்தர்ப்பத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்ட திரைப்படம் உள்ளம் கொள்ளை போகுதே.
   
இத்திரைப்படத்திலே இடம்பெற்ற கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா என்ற பாடலை இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

படம்          :    உள்ளம் கொள்ளை போகுதே   
இசை         :     கார்த்திக் ராஜா
பாடியோர்    :    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுஜாதா

பல்லவி

கவிதைகள் சொல்லவா?
உன்பெயர் சொல்லவா?
இரண்டுமே ஒன்றுதான்
ஓஹோ..!

ஓவியம் வரையவா?
உன்கால்தடம் வரையவா?
இரண்டுமே ஒன்றுதான்
ஓஹோ..!

யார் அந்த ரோஜாப் பூ
என் கனவில் மெதுவாக
பூ வீசிப் போனால்
அவள் யாரோ..?

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னைக் கண்ட நாள்முதல்!

உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே!

சரணம் ‡ 1

பெண்:        புல்வெளி மீது நடக்காதே
        பெயர் பலகைகள் இருக்குது பூங்காவில்
        அதைத்தான் படித்திட காற்றுக்கும்
        ஓ. தெரியாதே தெரியாதே!

ஆண்:        பூக்களை பூக்களை தீண்டாதே
        மலர்க்காட்சியில் சொல்கின்ற சொற்களிது
        அதைத்தான் வண்டுகள் எப்போதும்
        ஓ.. கேட்டாதே கேட்காதே!

பெண்:        எல்லைக்கோடுகள் தாண்டாதே
        உலக தேசங்கள் சொல்லும்

ஆண்:        பறவைக் கூட்டங்கள் கேட்காதே
        பறக்கும் பறக்கும் நம்மைப் போல்!

சரணம் ‡ 2

பெண்:        காற்றென காற்றென நான்மாறி
        உன்சுவாசத்தை  நானும் கடன்வாங்கி
        ரகசியமாய் நான் சுவாசிக்கவா சுவாசிக்கவா
        ஓ.. சுவாசிக்கவா சுவாசிக்கவா

ஆண்:        மேகங்கள் மேகங்கள் நானாகி
        உன்கூந்தல் வண்ணத்தை கடன்வாங்கி
        வானத்தின் இரவுக்கு
        கொடுத்திடவா கொடுத்திடவா
        ஓ.. கொடுத்திடவா கொடுத்திடவா

பெண்:        கடலின் அலையாக நான்மாறி
        உனது பெயர் சொல்லி வரவா

ஆண்:        உந்தன் கைக்குட்டை கடன்வாங்கி
        நிலவின் களங்கம் துடைக்கவா

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு