தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

பா.விஜய் நேர்காணல்

First <Prev[1] 2 3 4 Next > Last
1 பாடலாசிரியர்... நடிகர்... எதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்? இரண்டுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறதா?

ஒரு சிலர் இன்னும் அதிகமான பன்முகம் கொண்ட துறைகளிலும் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி அதில் ஜெயிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது என்னுடைய துறையில் பாடலாசிரியர், நடிகர் என்பது மிக அதிகமான இடைவெளி கொண்ட துறைகள் அல்ல. இரண்டும் வேறு வேறு முகங்கள் கொண்டவை என்றாலும் தீவிர உழைப்பின் மூலமாக இரண்டிலும் சமமான பங்களிப்பை செலுத்த முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்தபிறகுதான், நான் பாடலாசிரியர் என்கிற பங்களிப்பை செய்து கொண்டே நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

2 பாடல் எழுதுவது... நடிப்பு... எது சுலபமானது?

பாடல் எழுதுவது ஒரு வகையான கடினமானது. நடிப்பது என்பது வேறு வகையான கடினமானது. இரண்டும் சுலபமானது என்று என்னால் சொல்லவே முடியாது. காரணம் பாடல் எழுதுவதற்கும் மிகப்பெரிய இலக்கணத் தேர்ச்சி, இலக்கிய முதிர்ச்சி இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். நடிப்பு என்பதற்கும், மிகப்பெரிய அனுபவமும், அதே சமயத்தில் யதார்த்தமான நடிப்பை கையாள்கிற பக்குவமும் இருந்தால்தான் நடிப்பது என்பது சாத்தியம். ஆக இரண்டிலுமே சுலபம் என்று எதுவும் இல்லை. இரண்டுமே கடினமானது.

3 தேசிய விருதுக்கான அறிவிப்பு வந்தபோதும் பிறகு அதை பெற்ற-போது.ம் மனநிலை எப்படி இருந்தது?

தேசிய விருது அறிவிப்பு வந்தபோது, ஒரு மிகப்பெரிய உற்சாகம் பிறந்தது. காரணம் தேசிய விருது என்பது பொதுவாக இது வரைக்கும் என்னுடைய துறையில் குறிப்பாக இளைஞர்களுக்கு இதுவரைக்கும் தரப்பட்டதில்லை. வயது மூத்த கவிஞர்களுக்கு மாத்திரமே அந்த தேசிய விருது என்ற கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய விருது மட்டுமல்ல, “பத்மஸ்ரீ” யில் இருந்து “பத்மபூஷன்” வரைக்கும் அத்தனை தேசிய விருதுகளுமே வயதின் அடிப்படையில்தான் தரப்படுகிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்பக்கூடிய வகையில் விருதுகளுடைய அறிவிப்பு வரும். அதனால் தேசிய விருது என்பது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்துகொண்டு இருந்தது. அது இயக்குநர் சேரன் அவர்களுடைய “ஆட்டோகிராப்” திரைப்படத்தில் ஒவ்வொரு பூக்களுமாக மலர்ந்தபோது உண்மையிலேயே ஒரு மிக மிக நேர்மையான, நியாயமான ஒரு அறிவிப்பாக எனக்கு அது பெரிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

4 மீண்டும் தேசிய விருது பெறுவதற்கான முயற்சி?

மீண்டும் தேசிய விருது பெறுவதற்கான முயற்சி ஒவ்வொரு நம்பிக்கைக்குரிய பாடல்களை எழுதும்போதும் அத்தகு முயற்சியைத்தான் நான் செய்கிறேன். உதாரணமாக என்னுடைய “இளைஞன்” திரைப்படத்தில் வெளிவந்த பாடல்... “தோழா வானம் தூரம் இல்லை” பாட்டு. சமீபத்தில் வெளிவந்த “ஏழாம் அறிவு” என்ற படத்தில் வெளிவந்த “இன்னும் என்ன தோழா” என்ற பாடல். இப்படி ஏதாவது ஒரு படத்தில் அந்த வாய்ப்பு நேரும்போது அதில் தேசிய விருது என்ற முயற்சியை நான் செய்யாமல் இருப்பது இல்லை. அந்தப் படமும் அதற்கு கைகோர்த்தால் மாத்திரமே தேசிய விருது சாத்தியம் என்பதனால் அதற்கான படமும் பாடலும் இணையும் பொழுது அது நிகழும். அது “ஏழாம் அறிவாக”க்கூட இருக்கலாம். இன்னும் ஓராண்டு ஆகும். காத்திருப்போம்.

5 பலரையும் உற்சாகமூட்டி உத்வேகமளிக்கிறது உங்கள் எழுத்து. உங்களை உற்சாகப்படுத்துவது எது?

என்னை உற்சாகப்படுத்துவது எனக்கு முன்னே நான் வைத்துக்கொண்டுள்ள மிக பிரம்மாண்டமானதொரு இலக்கு. நமக்கு முன்னால் நம்முடைய இலக்கு எவ்வளவு தெளிவாகவும், அந்த இலக்கை நோக்கிய நம்முடைய பயணம் எத்தனை வலிமையானதாகவும் இருக்கிறதோ அவ்வளவு உற்சாகமாக ஒவ்வொரு பொழுதையும், ஒவ்வொரு செயலையும் நாம் சந்திப்போம். அந்த வகையில் எனக்கு முன்னே இருக்கின்ற இலக்கு மிகச்சிறியது அல்ல. மிக பிரம்மாண்டமானது. கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத ஒரு மிகப்பெரிய கனவுலகத்தை நான் சிருஷ்டித்து வைத்து இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அந்த கனவுலகத்தில் நிஜ பிரவேசத்தை என்னால் செய்ய இயலும்.
அந்த நிஜ பிரவேசத்திற்கான நகர்த்துதல்தான் என்னைyயும் என் எழுத்தையும் உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் வைத்திருக்கிறது.

6 நீங்கள் பின்பற்றும் பாடலாசிரியர்/கவிஞர், எழுத்தாளர்?

சரியான கேள்வி. இதில் அல்லது அல்லது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாடலாசிரியர் வேறு, கவிஞர் வேறு, எழுத்தாளர் வேறு. ஆகையால், எனக்குப் பிடித்த பின்பற்றுகின்ற பாடலாசிரியர் என்றால் காவியக் கவிஞர் வாலி அவர்கள். நான் பின்பற்றுகின்ற மிக பிரம்மாண்டமான ஒரு கவிஞர் என்றால் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதில் உடனடியாக எனது மனதிற்குள்ளே பதியம் இட்டு மலருகின்ற ஒரு முகம் என்றால் அது ஜெயமோகன்.

7 இசையமைப்பாளர்களுடன் ஏற்பட்ட சிறு ஊடல்கள்?

நிறைய... சிறு சிறு சண்டைகள் என்று சொல்ல முடியாது. ஒரு கருத்தை நாம் சொல்வதற்கும், அவர்கள் அதை சொல்லி நாம் செய்வதற்கும் இடையே நடக்கின்ற உரையாடல்கள். அதில் சில நேரங்களில் அதுவும் இப்போது சமீபகாலங்களில் இசையமைப்பாளர்கள் மிகவும் அற்புதமான நண்பர்களாகவே கவிஞர்களோடு பழகுகின்ற காரணத்தினால் அப்படிப்பட்ட ஊடல்கள், பிளவுகள் இன்றைய காலகட்டத்தில் ஏற்படுவதில்லை. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் சினிமா வேறு மாதிரியாக இருந்தது. அன்றைக்கு ஒவ்வொரு பிரிவினருக்கும் நடுவிலே ஒரு மாயையான பிம்பம் அவர்களுக்குள்ளே இருந்தது. இப்போது அப்படிப்பட்ட பிம்பம் யாருக்குமே கிடையாது. எவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் அல்லது சிறிய கவிஞராக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து கலந்து பணியாற்றுகின்ற போது மிக பரஸ்பரமான நட்புணர்வோடுதான் அவர்கள் பாடல்களை உருவாக்குகின்றனர். அதனால் அதில் பெரிய சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நான் பெரிதாக சந்திக்கவில்லை.

8 உங்கள் பாடல், நீங்கள் நினைத்த அளவிற்கு படமாக்கப்படாதபோது உங்கள் மனநிலை?

நிச்சயமாக... மிகவும் வருத்தமாக இருக்கும். அந்த பாடலுக்கான சூழல் விளக்கப்படும்போது அவ்வளவு தூரம் அதை தத்ரூபமாக பிரமாதமாக எடுப்பதாக விளக்கி இருப்பார்கள். ஆனால் சூழல் காரணமாக தயாரிப்பு நிர்பந்தம் காரணமாக அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அந்த பாடல் அவர்கள் நினைத்த அந்த அளவிற்கு அழகாகப் படமாக்கப்பட்டிருக்காது.

அப்போது மனநிலை என்பது மிக மிக ஒரு அழுத்தமான மனநிலையாக அதுவும் அந்த நல்ல பாடல், படமாக்கப்பட்ட விதத்தின் காரணமாக மிகப்பெரிய அளவில் பேசப்படாமல் போய்விடும்போது, சருகுகள் நிரம்பிய ஒரு இடத்திலே நடந்து போகின்ற ஒரு மனநிலையைத்தான் அந்த நேரத்தில் உணரமுடிகின்றது.

9 நீங்கள் எழுதிய பாடல் வரிகளை, காட்சிப் படுத்தலில் இன்னும் மெருகேற்றிய பாடல்?

இதில் இயக்குனர் ஷங்கர் அவர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவரால் மட்டும்தான் இது சாத்தியம் என்று கூட நினைக்கிறேன். காரணம் என்னவென்றால் அவருடைய தயாரிப்பு தொகையை கட்டுமானப்படுத்துவதும், அதை கட்டவிழ்த்து விடுவதும் அவர் ஒருவரே. அவர்தான் தீர்மானிக்க கூடிய மிகப்பெரிய சக்தி. அதனால் அவரால் நினைத்ததைவிட எதையும் சிறப்பாக செய்ய முடியும். அதையும் கடந்து அவருக்குள் உள்ள அந்த தனித்துவமான உழைக்கும் திறன், அவருடைய ஒவ்வொரு படத்திலுமே அதிக அதிகப்படியான படிகளை ஏற வைக்கிறது. இதனால் அவருடைய பாடல்களை நான் எழுதும்போது, அல்லது யார் எழுதும்போதுமே அதை அவர் சொல்லும்போது இருக்கின்ற பிரமிப்பைவிட திரையில் பார்க்கும்போது இன்னும் பத்துமடங்காவது அந்த பிரமிப்பு கூடுதலாகத்தான் மாறியிருக்கும். அப்படிதான் அவருடைய ”சிவாஜி படத்தில் ஒரு கூடை சன்லைட் பாடல்.mm அந்த பாடல் ஆகட்டும் எந்திரன் படத்தில் கிளிமஞ்சாரோ பாடல் ஆகட்டும்... இப்படி அவருடைய படங்களில் நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக காட்சிப்படுத்தலில் மெருகேற்றப்பட்ட பாடல்களை நான் பார்த்திருக்கிறேன்.

10 உங்கள் பாடல்கள் சில படங்களில் சிதைக்கப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?

இப்போது பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. அதாவது திரை மொழியில் “மேக்கிங்” என்று சொல்லப்படும் நவீனத்துவத்தையும் முழுக்க முழுக்க இயக்குநர்கள் தங்களுடைய கைவசப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. எழுத்து வடிவம்... அதை வெளிப்படுத்துகின்ற நடிப்பு வடிவம் இவற்றையெல்லாம் தாண்டி டெக்னிக்கலான ஒரு லாங்வேஜ் என்று சொல்லப்படுகின்ற அந்தத் திரைமொழியினுடைய மாறுதல் சினிமாவில் நடந்திருப்பதால், மிகப்பெரிய அளவில் பாடல்களையோ, காட்சிகளையோ அவங்க கண்டிப்பாக நினைத்ததை திரையில் கொண்டுவர மு

11 நீங்கள் பாடல் எழுதும் இதே காலகட்டத்தில் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் இருந்தால்?

நிச்சயமாக கடுமையான பெரிய போட்டியை சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நான் முதன்முதலாக திரைப்படப் பாடல் எழுதும்போது, என் முன்னே இருந்த மிக பிரம்மாண்டமான இரு கவிஞர்கள் ஒருபுறம் கவிப்பேரரசு வைரமுத்து, மறுபுறம் கவிஞர் வாலி அய்யா அவர்கள். இந்த இருவருமே என்னைப்போன்ற எந்த பாடலாசிரியர்களின் வளர்ச்சியையும் தடுக்கவில்லை. ஒரு மோதலாகவும் அவர்கள் இருவருமே எங்களைக் கருதவில்லை. இருந்தபோதிலும், எனக்கு மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது ஆரம்பத்தில். அவர்கள் இருக்கின்ற கோலோச்சுகின்ற துறையில் பாடல் எழுதி வெற்றி பெறுவது என்பது. ஆனால் அப்போது கிடைத்த அற்புதமான இயக்குநர்கள், அந்தப் படங்கள், பாடல்கள் உதாரணமாக, “தெனாலி”யில் சுவாசமே, “வெற்றிக் கொடிகட்டு”வில் “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு”, இயக்குநர் விக்ரமனுடைய “வானத்தைப்போல” படத்தில்... “காதல் வெண்ணிலா”... இதுபோல அழுத்தமான பாடல்கள்தான் எனக்கென்று ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. அப்படி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இருந்திருந்தாலும் அந்த ஒரு பிரம்மாண்டமான அலையையும் சந்தித்துதான் என்னுடைய கட்டுமரத்தை செலுத்தியிருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

12 பாடல்களில் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்த நினைக்கும் சமுதாய சிந்தனை?

சமுதாய சிந்தனையைப் பொருத்தவரைக்கும் எனக்கு தமிழர்களுடைய தொன்மையான வரலாற்றை, தமிழர்கள் மறந்துபோன தங்களுடைய வீரமான சரித்திரத்தை சமுதாய சிந்தனையாக பதிவு செய்யணும் என்பது என்னுடைய பெரிய குறிக்கோள். அதை அவ்வப்போது சில இடங்களில் நான் செய்யமுடிந்தது. உதாரணமாக சொல்லவேண்டுமானால் “பில்லா” என்ற படத்தில் முருகவேல் சம்மந்தமான ஒரு பாடல் வரும். அந்தப் முருகர் பாடலில் நான் ஒரு சில வரிகள் எழுதியிருப்பேன், தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் அந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் என்று முருகர் தமிழர்களுடைய மூதாதையர் என்பதையும், தமிழன் எப்படி இறைவனாக மாற்றப்பட்டான், வழிபட ஆரம்பிக்கப்பட்டான் என்ற மிகப்பெரிய வரலாற்றையும் ஒரு திரைப்படப் பாடலில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். “தமிழில் பேசும் தமிழ்குல விளக்கே, வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு” என்ற மொழி ரீதியான சிந்தனைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றேன். “ஏழாம் அறிவி”ல் “இன்னும் என்ன தோழா” பாடலில்கூட “கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் கலங்களில் சுமக்கிறோம். எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியில் சுவைக்கிறோம்” என்று வீரத்தமிழையும், இன்னொருபுறம் நம்முடைய ஆதி தமிழையும் இரண்டையும் இணைக்கின்ற ஒரு புள்ளியாக அந்தப் பாடலை நான் பயன்படுத்துகின்றேன். இப்படி ஆங்காங்கே தமிழர், தமிழனுடைய பெருமையை பதிவு செய்ய நினைப்பது என்னுடைய சமுதாய பங்களிப்பாக திரைப்பட பாடல்களில் இருந்து வருகின்றன.

13 தங்கள் பாடல்கள் பல்கலைக்கழகப் பாடமாக வைக்கப்பட்டது பற்றி?

பல்கலைக்கழகப் பாடமாக என்னுடைய பாடல்கள் வைக்கப்பட்டது எனக்கு கிடைத்த மகா கவுரவம். நிச்சயமாக அந்த கவுரவத்திற்கு ஈடு இணையாக விருதோ, ஒரு மகிழ்ச்சியான பெருமிதமோ எனக்கு இதுவரைக்கும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு பல்கலைக்கழகம் என்பது பலநூறு கல்லூரிகளை உள்ளடக்கியது. பலஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த பல்கலைகழகத்தினுடைய பூந்தோட்ட மலர்களாக இருக்கக் கூடியவர்கள் அவர்களுடைய அத்தனை பேருடைய புத்தகங்களிலும் “ஒவ்வொரு பூக்களுமே” என்ற பாடலை அச்சில் ஏற்றி அவர்களுக்கெல்லாம் பாடமாக்கியது... அந்த சிந்தனை, எண்ணம், முடிவு ஆகியவற்றிற்கு தலை வணங்குகிறேன். ஒரு தரமான பாடலுக்கு கிடைத்த மிக நியாயமான மரியாதை என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு நான் நட்சத்திர எண்ணிக்கையில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.

14 இதேபோல் பல திரைப்படப் பாடல்களை ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது பற்றி?

திரைப்படப் பாடல்களை பொருத்தவரைக்கும் அபூர்வமாகத்தான் இதுமாதிரியான சமுதாயக் கருத்தோ, சிந்திக்க வைக்கும் கருத்துக்கான வரிகளையோ சொல்லமுடியும். பெரும்பாலும் திரைப்படப் பாடல்களில் பாடல்கள் என்பது முழுக்க முழுக்க காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துவதற்கும் நகர்த்துவதற்கும், காட்சிகள் தொய்வடையும்போது காட்சிகளை தூக்கி நிறுத்துவதற்கும் மாத்திரமே இப்போது உபயோகப்படுத்தப்படுகிறது. திரைப்பட பாடல்களின் மூலமாக பெரிய கருத்துக்களை எல்லாம் சொல்லி அதைக் கொண்டுபோய் சேர்க்கின்ற எண்ணம் இங்கே பலருக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு பூக்களுமே” போன்ற ஒருசில பாடல்களின் மூலமாக மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதுபோல நிறைய பாடல்கள் உருவாகி அவை எல்லாமே ஆரம்பக்கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய அபூர்வமான சாதனையாகத்தான் எனக்கு தோன்றுகிறது. அப்படி நடக்குமா என்று நம்பிக்கையாகவும் சொல்ல முடியவில்லை.

15 திரைப்படங்களில் பாடல் காட்சிகள் இல்லாவிட்டால்?

திரைப்படங்களில் பாடல் காட்சிகள் இல்லாவிட்டால் மிக நன்றாக இருக்கும். இன்னும் ஒருபடி மேலே முன்னேறும். திரைப்படத்தினுடைய நோக்கு, போக்கு உயரியதொரு இலக்கை நோக்கி நகரும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம். பாடல்கள் என்பது ஒரு திரைப்படத்தின் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும், ஒரு படத்தினுடைய 30 நிமிட நேரத்தை பாடல்கள்தான் விழுங்குகின்றன. ஆகவே அபூர்வமாக அந்தப் பாடல்கள் படத்தினை தூக்கி நிறுத்திவிட்டால் படத்தினுடைய வருமானமே மூன்று நான்கு மடங்கு அதிகரித்துவிடும். அதே சமயத்தில் பாடல்கள் சரியாக அமையாவிட்டால் அந்த படத்தினுடைய மிகப்பெரிய தோல்விக்கும் அதுவே காரணமாக அமைந்துவிடும். ஆகையால் பாடல்கள் என்பது மிகப்பெரிய பலப்பரீட்சை.

16 பாடல் காட்சிகள் அவசியமா?

பாடல்கள் படத்தினுடைய நிர்பந்தம் என்று நான் சொல்லவில்லை. கதையும் அந்த காட்சி அமைப்பும் இடம் கொடுத்தால் மாத்திரமே அங்கே பாடல் என்பது பொருத்தப்பட வேண்டும். அது தவிர, ஒரு படத்திற்கு ஆறு பாடல்கள்... முதல் பாதியில் 3 பாடல்களும், இரண்டாம் பாதியில் 3 பாடல்களும் என்ற மாதிரி கணக்கு போட்டு பாடல் காட்சிகளை குவித்தால் நிச்சயமாக பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறது. திரையரங்குகளில் பாடல்காட்சிகள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் இப்போது பெருவாரியாக எல்லா திரையரங்குகளிலும் எல்லா ஊர்களிலும் எழுந்திருக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவர்களை இருக்கையிலேயே இருக்க வைப்பது எப்படி என்பதை கருத்தில் கொண்டுதான் இன்றைக்கு இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், பாடகர்கள், இந்தப் பாட்டுத்துறை சார்ந்த அத்தனைபேரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆக, இருக்கையை விட்டு எழமுடியாத அளவிற்கு கட்டிப்போட்டு பாடலை பார்க்கச் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தகுந்த மாதிரி அழுத்தமான காட்சிகளும் மிக மிக அவசியமான பாடல்களுமாய் அவை இருந்தால் மாத்திரமே அது சாத்தியம்.

17 பாடல் படமாக்கம் குறித்து இயக்குனர்களுக்கு ஆலோசனை கூறியது உண்டா?

நிச்சயமாக. ஏனென்றால் இயக்குநர்களும் இப்பொழுது மிக மிக நெருங்கிய நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இயக்குநர் என்ற பிரம்மாண்ட பிம்பத்தை எல்லாம் அவர்கள் ஒரு தலைமுறைக்கு முன்னமே உடைத்தெரிந்து வெளியே குதித்து விட்டார்கள். ஆகவே நான் ஒரு இயக்குநர்... எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல முடியாது என்கிற எண்ணம் யாருக்கும் இல்லை. ஆகவே, மிக மிக ஆரோக்கியமான ஒரு இளைய தலைமுறையினுடைய கைவசம் தமிழ் சினிமா தவழ்ந்து கொண்டிருக்கிறது என்பதால், அவர்கள் ஆலோசனை என்பது எந்த வடிவத்தில், யார் மூலமாக வந்தாலும் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் ஒரு பாடல் எடுக்கும்பொழுது நிச்சயமாக இயக்குநர்களோடு கலந்து பேசி என்னுடைய சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்கிறேன்.

18 குறுகிய காலத்தில் எழுதி முடித்த பாடல்?

நிறைய பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சொல்வதென்றால் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல் “உள்ளம் கொள்ளை போகுதே” என்ற படத்தின் “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா”... அந்தப் பாடல் மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டதுதான். “பட்டியல்” திரைப்படத்தில் விஷ்ணுவர்த்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்துமே மிக மிக குறுகிய காலத்தில், கம்போசிங்கிற்கும் பாடல் எழுதியதற்கும் ஒரு பெரிய கால இடைவெளியே இருந்திருக்காது. அவர்கள் எந்த வேகத்தில் பாடல்கள் இசையமைத்தார்களோ அந்த வேகத்தில் நானும் பாடல்களை எழுதியிருக்கிறேன். அதேபோல் “அறிந்தும் அறியாமலே” சமீபத்தில் வெளிவந்த “சீடன்” திரைப்படமும் அதேபோல்தான். நிறைய படங்களில் பாடல்கள் எழுதும்பொழுது ஒரு சில இசையமைப்பாளர்களுடன் அவர்களுடைய வேகத்திற்கு சமமாக பாடல்கள் எழுதிய அனுபவமும் உண்டு.

19 அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல்?

அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் என்றால் அதுவும் நிறையவே இருக்கு. சமீபத்தில் வெளிவந்த “எந்திரன்”திரைப்படத்தில் “கிளிமாஞ்சரோ” அது சற்று கால அவகாசம் அதிகம் எடுத்துக்கொண்ட பாடல். அதுமாதிரி ஒரு சில பாடல்கள்தான். “கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு” பாடல் ஒரு பெரிய கால அவகாசம் எடுத்துக்கொண்ட பாடல். இப்படி ஒரு சில பாடல்கள் நாம் எழுதுகின்ற கருத்தை முழுமையாக சொல்ல முடியாமல் ஒரு பெரிய முட்டுக்கட்டையை நம்முடைய மூளைக்குள் போட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே அவற்றை எல்லாம் உடைத்து உடைத்து வார்த்தைகளைத் துருவித் துருவி வார்ததைகளைத் துடைத்து எடுத்து கோர்த்து அவற்றை மிக இயல்பான கோர்ப்பாக மாற்றுவதற்கான அந்த ரசவாதத் தன்மை சில பாடல்களில் தாமதப்பட்டு விடும்.

20 சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவித்த பாடல்?

சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவித்த பாடல் என்றால் ஏழாம் அறிவு திரைப்படத்தில் இன்னும் என்ன தோழ என்ற முதல் வரியைத் தேடி எடுப்பதற்கு கிட்டத்தட்ட 25 பல்லவிகளாவது நான் எழுதி இருப்பேன். 25 பல்லவிகளிலும் அந்த வரி கிடைக்காமல் இறுதியில் நானும், இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சேர்ந்து ஒரே இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது எனக்குள் சட்டென்று தோன்றிய ஒரு வாசகம்தான் இன்னும் என்ன தோழா அது இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது. அதுமாதிரி வார்த்தைகளை முதல் பல்லவிக்கு தேடுகின்ற ஒரு சிரமத்தைப் போன்ற வலி வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அந்த வலியை அனுபவித்த பிறகுதான் ஒரு அற்புதமான பல்லவி பிறக்கும். பாடல் துறையில் இருக்கின்ற அத்தனை பேருக்குமே இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

21 முன்னோடிக் கவிஞர்கள் பற்றி?

முன்னோடிக் கவிஞர்களைப் பொருத்தவரைக்கும் நான் எல்லாரையுமே மதிக்கின்றேன்.காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் காமராசன், கவிஞர் காமகோடியன், கவிஞர் பிறைசூடன், கவிஞர் காளிதாசன் என்று அற்புதமாக திரைப்படப் பாடல்கள் எழுதிய மிகப்பெரிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். இதுவரைக்கும் 400க்கும் மேற்பட்ட கவிஞர்கள் திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருப்பதாக தகவல். இன்னும் ஆயிரக்கணக்கில்... ஒரு பாடல் எழுதிய கவிஞர்கள் இருப்பதாகவும் ஒரு குறிப்பேட்டில் படித்த நினைவு உண்டு. ஆக முன்னோடிக் கவிஞர்கள் அந்த அந்தக் காலகட்டத்திற்கு தகுந்தாற்போல அந்ததந்த ரசனைகளை பூர்த்திசெய்து எழுதிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அது அன்றைய ட்ரெண்டாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் எழுதிக் கொண்டு இருப்பது இன்றைய காலகட்ட ரசனையைப் பூர்த்தி செய்கின்ற ஒரு ட்ரெண்டாக இருக்கின்றது. ஆகவே ஏற்றத்தாழ்வு என்று எதையும் பார்க்க முடியாது. அவர்கள் அன்றைய கால தேவையைப் பூர்த்தி செய்தார்கள். நாங்கள் இன்றைய காலகட்டத் தேவையை பூர்த்தி செய்கிறோம். நாளை வரப்போகிறவர்கள் நாளைய தேவையை பூர்த்தி செய்வார்கள்... அவ்வளவுதான். இதில் வந்து யாருக்கும் மதிப்பெண்ணோ, நட்சத்திர அந்தஸ்தோ, தனிப்பட்ட முறையில் ஒரு இடமோ என்று பிரித்து எதையும் சொல்ல இயலாது.

22 காதல் பாடல்கள் எழுதும்போது மனதில் வருவது கற்பனை உருவமா? அல்லது கடந்த காலத்தில் உங்கள் நெஞ்சை பாதித்தவர்களா?

காதல் பாடல்கள் எழுதும்போது அதுவும் குறிப்பாக கேட்பது என்பது ஒரு பெண் வர்ணனை பாடல். பெரும்பாலும், வெளிச்சம்போட்டு சொல்வதென்றால் கதாநாயகிகளை மனதில் வைத்துக் கொண்டு பாடல் எழுதுவதே கிடையாது. எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். கதாநாயகிகள் என்றால் அவர்களுக்கென்று ஒரு பிம்பம் இருக்கின்றது. யாருடைய பேரையும் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. ஆனாலும் அந்த பிம்பத்தை உடையவர்களை வைத்து மற்ற கதாபாத்திரத்துடன் பொருத்திப் பார்த்து எழுதுவது மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண்ணிற்காக எழுதப்பட்ட பாட்டு என்றால் இன்றைய தலைமுறையில் ஐஸ்வர்யா ராய்க்காக எந்திரன் படத்தில் நானும் இரண்டு வரிகள் எழுதியிருப்பேன். அதேபோல கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களும் அந்த ஐஸ்வர்யா ராயினுடைய அழகுக்காக இரண்டு வரிகள் எழுதியிருப்பார். இது ஓரளவு அந்த பெண்ணிற்காக எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்லலாம். மற்றபடி மீதி பெண் வர்ணணைகள், பாடல்கள் எல்லாவற்றிலுமே அவரவர்கள் மனதில் எந்தவிதமான ஒரு அழகை கருதிக் கொள்கிறார்களோ அதனுடைய தூண்டுதலின் காரணமாக எழுதப்பட்ட வரிகளாகத்தான் இருக்கின்றன.

23 பிறர் மீதான கோபத்தைப் பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?

பிறர் மீதான கோபத்தை நிச்சயமாக பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பேன். பிறர்மீதான கோபத்தை என்றால்... என்ன, சமுதாயத்தின் மீது... சமுதாயம் அலட்சியமாக நடத்துகொள்வதை, மிக அற்புதமான திறமையை புறக்கனிப்பதை, இளைஞர்களுக்கு வெற்றிகளை வரவிடாமல் தடுக்கின்ற அந்த மனோநிலையை... இவற்றையெல்லாம் பற்றி ஒரு கோபம் எல்லோருக்குள்ளேயும் இருக்கும். இப்படிப்பட்ட கோபங்களை அவ்வப்போது பாடல் வரிகளில் வெளிப்படுத்தி வருகிறேன்.

24 குடும்ப வாழ்க்கை பற்றி? காதல் திருமணமா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்ததா?

என்னுடைய திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். மனைவி பெயர் லேனா. சொந்த கிராமமான உட்கோட்டைதான் அவர்களுடைய ஊரும். கிட்டத்தட்ட ஒரு நெருங்கிய உறவினர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு இரண்டு தெரு தூரத்தில் சொந்தம். அந்த வகையில் என்னுடைய திருமணம் என்னுடைய பெற்றோர்களுடைய விருப்பத்திற்கினங்க என்னுடைய கிராமத்திலேயே மிக சிறப்பாக நடைபெற்றது. அப்போது இயக்குநர் பாக்யராஜ், சத்யராஜ், சேரன், ரமேஷ் கண்ணா, திலகவதி ஐபிஎஸ் இப்படிப்பட்ட முக்கியஸ்தர்களின் முன்னிலையில்தான் என்னுடைய கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.நான் காட்ஃபாதர் என்று கருதுகிற, என்னுடைய குடும்பத்தினுடைய மிகப் பெரியவர் ஜே. சுத்தானந்தம் அவர்களுடைய தலைமையில் திருமணம் நடைபெற்றது. மிக அற்புதமான ஒரு மரபுக் கவிதையை எழுதிய ஒரு மனோநிலையில் அந்தத் திருமணம் நடைபெற்றது என்று சொல்லலாம்.

25 பாடல் எழுதுவதற்கு... ஓவியர்களைப் போல உங்கள் முன்னால் நிஜ உருவங்கள் தேவையா?

பாடல்கள் எழுதுவதற்கு ஓவியர்களைப்போல நிஜ உருவங்கள் எனக்கு தேவை என்று தோன்றவில்லை. நிஜ உருவங்களை விட நிஜ உணர்வுகள்தான் பேசும். நிஜ உணர்வுகள்... கண்டிப்பாக பாடல் என்று இல்லை அது எந்தவொரு படைப்பாக இருக்கட்டும், நிஜமான உணர்வுகள் அதில் ஏதாவதொரு இடத்தில் இடம் பெற்றுவிட்டால்கூட சேர வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. நாம் அந்த வரிகள் யாரை தொடவேண்டும் என்று நினைத்து யாருக்காக அந்தப் பாடலை எழுதினோமோ... அதில் நிஜம் இருந்தால் கண்டிப்பாக அந்த உணர்வுடையவர்களுக்கு போய் சேர்ந்துவிடுகிறது. ஆகையால் உருவங்களை பார்த்து பாடல் எழுதுவது என்பது குறைவு. உணர்வுகளை வைத்துத்தான் பாடல்கள் பிறக்கின்றன.

26 நிஜ பிம்பங்கள் இருந்தால் கற்பனை வளம் இன்னும் அதிகமாக சிறகடிக்கும் என உணர்கிறீர்களா?

நிஜ பிம்பங்கள் இருந்தால் கற்பனை வளம் சிறகடிக்கும் என்கிறது இல்லை கதாநாயகர்களுக்கு வேண்டுமானால் அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படிங்கற அந்த பெரியவருக்குள்ளேயே ஒரு பெரிய ஒரு மர்மமான ஒரு மந்திர சக்தி இருக்கு. அவருக்கு பாடல் எழுதும்போது மட்டும், அவருக்கு இருக்கக்கூடிய நிஜத்தின் பிம்பம் நம்மை மிகப்பெரிய கற்பனைகளுக்கு அழைத்துச் செல்லும். அவரைப் பார்த்து நாம் அதிகமாக பரவசப்பட்டதன் காரணமா, அவருக்கு நானும் ஒரு ரசிகனாக இருப்பது ஒரு காரணமா என்று எனக்குப் புரியவில்லை. அல்லது மக்களுடைய மிகப்பெரிய ரசனை சக்தியை ஒன்று திரட்டிய ஒரு மகா நடிகன் என்ற ஒரு காரணமா என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இப்படிப்பட்ட சில ஹீரோக்களுக்கு மட்டும், சூப்பர் ஸ்டாரைப் போன்ற அந்தஸ்து உடைய அந்த ஒரு மக்களுடைய மிகப்பெரிய ஆரவாரத்தை அள்ளிக்கொண்டு போகிறவர்களுக்கு மட்டும் அந்தப் பாடல், எழுதும் போது அவர்களுடைய நிஜத்தினுடைய பிம்பம் கற்பனை வளத்தை தூண்டத்தான் செய்கிறது.

27 எல்லா பொருள் பற்றியும் கவிதை எழுதியிருக்கும் நீங்கள், அதிகம் விரும்பும் பாடலுக்கான கருப்பொருள்?

நான் அதிகமாக பாடல் எழுத விரும்பும் கருப்பொருள் தன்னம்பிக்கைதான். ஏனென்றால் இன்றைய இளைஞர்களுக்கு அளவிற்கு அதிகமாக தேவைப்படுவது தன்னம்பிக்கையான கருத்துக்கள், தன்னம்பிக்கையான பார்வை, தன்னம்பிக்கையான முயற்சி, ஆகத் தன்னம்பிக்கையான ஒரு பெரிய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்ற ஒரு மகா ராஜபாட்டையை உருவாக்குவது என்னுடைய இலக்குகளில் ஒன்று.
அதை திரைப்படப் பாடல் என்கிற மிகப்பெரிய வலிமையான வசியமான சக்தியின் மூலம் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் நான் அதிகம் எழுத விரும்பும் கருப்பொருள் தன்னம்பிக்கை.

28 உங்கள் எழுத்து எதிர்கால சமூகத்தைப் புரட்டிப்போட வேண்டும் என நினைத்ததுண்டா?

என்னுடைய எழுத்து எதிர்கால சமுதாயத்தை புரட்டிப்போடும் அப்படிங்கிற நினைப்பு எனக்கில்லை. அதை சாதிக்க முடியுமா என்ற மிகப்பெரிய ராட்ஷச வினா எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பெரியாரை விடவா மிகப்பெரிய சீர்த்திருத்தவாதி எழுத்துலகத்திலே பிறந்திருக்க முடியும். அவ்வளவு பின்தங்கிய சமூகத்தில் பிறந்து வளர்ந்த, உலகத்தினுடைய மிகப்பெரிய பகுத்தறிவு ஞானப்பார்வை கொண்ட மகா எழுத்தாளர் பெரியார். அவருடைய எழுத்து, சமூகத்தை புரட்டிப் போடும்,மாற்றத்தை உருவாக்கும் என்ற அவருடைய முழுமையான எண்ணமே இன்னும் நிறைவேறவில்லை என்ற பட்சத்தில், எல்லா எழுத்தாளர்களுடைய இலக்குமே சமூகத்தை சலவை செய்ய வேண்டும் என்ற நிலையில் மட்டும் இருந்துவிடுவதில்லை. சமூகத்தினுடைய அவலங்களை, தவறுகளை அடுத்தடுத்த சந்ததியினருக்கு சுட்டிக்காட்டுவது கூட போதுமானதாக இருக்கும். அந்த விதத்தில் என்னுடைய எழுத்துக்களின் மூலமாக செய்ய நினைப்பது, மறந்த நம்முடைய மாபெரும் சாதனை படைத்த மூத்த தலைமுறையின் நினைவுகளின் நிகழ்வுகளை மீண்டும் புதிய தலைமுறையினருக்கு நினைவூட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய எழுத்து ரீதியான இலக்கு.

29 நீங்கள் நடித்த திரைப்படங்கள் பற்றி திரையுலக நண்பர்கள்/ ரசிகர்கள் கருத்து?

ஞாபகங்கள், இளைஞன் என்ற இரண்டு திரைப்படத்திற்குமே என்னுடைய நெருங்கிய திரையுலக நண்பர்கள் தங்களுடைய நேர்மையான விமர்சனங்களை என் முன்னால் வைத்தார்கள். என்னுடைய ரசிகர்களைப் பொருத்தவரைக்கும், ரசிகர்கள் என்று சொல்வதைவிட அவர்களை வாசகர்கள் என்று சொல்வது எனக்கு இன்னும் கௌரவமாகப்படுகிறது. ஏனென்றால் எனக்கு உருவான முதல் வட்டம் வாசகர் வட்டம்தான்... எழுத்து ரீதியாக. அவர்கள்தான் எனக்கு, திரையில் என்னைப் பார்த்து ரசித்தவர்களாக பின்னாளில் மாறினார்கள். ஆகவே அந்த வாசகர்கள் பலர் என்னுடைய இரண்டு திரைப்படங்களிலும் இருக்கின்ற என்னுடைய பழுதுகளை என்னிடம் தெரியப்படுத்தாமல் அது என்னை காயப்படுத்திவிடுமோ என்கிற காரணத்தினால் என்னிடம் நேரிடையாக சொல்லாமல் கடிதங்கள் வாயிலாக அல்லது சின்னச் சின்ன ஆலோசனைகள் மூலமாக இப்படித்தான் தங்களுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாக சொன்னால் திரையுலக நண்பர்களைப் பொருத்தவரைக்கும் எனக்கு மிகப்பெரியதொரு உறவு உண்டு. அவர்களிடமிருந்து பல நேர்மையான கருத்துக்கள் என்னுடைய இரண்டு திரைப்படத்திற்கும் எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த இரண்டு படத்தின் அனுபவங்களை வைத்துத்தான் மூன்றாவது படிக்கட்டை நெருங்கியிருக்கிறேன்.

30 திரைப்படம் இயக்கும் லட்சியம் உள்ளதா?

 நிச்சயமாக திரைப்படம் இயக்கும் இலட்சியம் கண்டிப்பாக உண்டு. ஏனென்றால் என்னுடைய பிரம்மாண்டமானதொரு கனவு. அந்தக் கனவை நிஜமாக்குவதற்கு நான் ஒரு நாள் இயக்குநரானால் மாத்திரமே சாத்தியம்.

31  ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...ஒருநாளில் நிஜமாகும்! இதை எழுதிய உங்களின் கனவு?

ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும். நிச்சயமாக இந்த வரிகள் என்பது எல்லோருக்குமான வரிகள் மட்டும் அல்ல. எனக்கும் சேர்த்து எழுதிக் கொண்ட வரிகள்தான். அதனால் என்னுடைய கனவு என்பது கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய ஒரு பூரணத்தை அடையக்கூடிய தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. விரைவில் நான் அந்தக் கனவை, சமூகத்திற்கும், திரைப்பட உலகின் மொத்தப் பார்வைக்கும் விரிவுபடுத்திக் கூறவேண்டிய நாள் விரைவில் வரும். அன்று அதை இந்த இணையதளத்திலும் சொல்லுவேன்.

32 சமகால இளைஞர்களும் எதிர்கால தமிழ் சமுதாயமும் தங்களைப் போன்ற லட்சியப் பணியாளர்களின் சேவையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கான உங்கள் எதிர்கால திட்டங்கள்?

என்னுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்றுதான் “இ-த்ரீ” என்ற அமைப்பு. “ இளைஞர் இலக்கிய இயக்கம்” என்ற இந்த இயக்கத்தின் மூலமாக ஏராளமான திட்டங்களை, இளைஞர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய இலட்சியப் பயணத்தை மேற்கொள்ள வைக்கின்ற ஒரு முயற்சிyaakaeduthtயாக எடுத்து செல்ல இருக்கின்றேன். “இ-த்ரீ” இது பற்றிய விரிவான இலட்சிய பார்வைகள் என்ன என்பது பற்றி இந்த இணையதளத்திலேயே ஒரு பெரிய பக்கத்தை உருவாக்கி தந்திருக்கிறோம். கண்டிப்பாக “இ-த்ரீ” என்பது இளைஞர்களுடைய மிகப்பெரியதொரு மாற்று சக்தியாக உருவாகி மிகப்பெரிய ஒரு இன எழுச்சியை, இலக்கிய உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

33 எந்த நிலையில், எந்த வயதில் கவிஞராக முடிவு செய்தீர்கள்?

எந்த நிலையில் கவிஞராக வேண்டும் என்று நான் முடிவு செய்தேன் என்பதைவிட கவிதை என்னை கவிஞனாக்கியது என்று தான் நான் சொல்லவேண்டும். ஏனென்றால் கவிதையைத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேனா, அல்லது கவிஞனாக மாறிக்கொண்டிருக்கிறேனா என்று எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் தினமும் படிப்பது, தினசரி சிந்திப்பது தினசரி எழுதுவது இப்படியே என்னுடைய பள்ளி நாட்கள், இளைய பொழுதுகள் கரைந்தோடியிருக்கிறது. ஆக பள்ளிநாட்களுக்கும் கல்லூரிநாட்களுக்கும் இடையில் நிகழ்ந்த அந்த மிகப்பெரிய என்னுடைய மனப் போராட்டத்திற்குண்டான விடைதான் நான் கவிஞனாகியது. எனக்குள் இருந்து கவிதை வந்தது. ஆக கவிதைதான் என்னை முந்தி கவிஞனாக்கியது என்பது என்னுடைய பார்வையில் முன்னோக்கி வந்து பின்னோக்கி பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

34 ஆங்கிலம் பேசுவதை கவுரவமாகக் கருதும் சமுதாயத்தில், தமிழ் பேசுவதைப் பெருமையாக நினைக்க வைக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன செய்ய வேண்டும்?

தமிழ் பேசுவதை பெருமையாக நினைக்க வைக்க வேண்டும் என்றால் தமிழ் மொழி உலகத்தினுடைய மிகப்பெரிய உயரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும். தமிழில் இருந்து மிகப்பெரிய கலைஞர்கள் உலகரீதியான அடையாளங்களில் அங்கீகாரங்களை, ஆசனங்களை பெறவேண்டும். தமிழ் மூலமாக மிகப்பெரிய கௌரவங்களை தமிழர்கள் அடைய வேண்டும். இதெல்லாம் சாத்தியமானால் மாத்திரமே தமிழ் பேசுவது என்பது பெருமையாக மக்களால் நினைக்கப்படும். அப்படிப்பட்ட அந்த மூன்று நிகழ்வுகளும் நிகழ்வதற்கு குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டாவது பிடிக்கும் என்பது என்னுடைய கணக்கீடு. ஏனென்றால் அவ்வளவுதூரம் அந்நிய தேசிய மோகமும், அந்நிய மொழி மோகமும் பெருகி கிடக்கிறது... நமக்குள் மூழ்கி கிடக்கிறது. இவையெல்லாம் கடந்து நம்முடைய மொழியினுடைய தொன்மையை உலகத்தினுடைய கூரைக்கு எடுத்து செல்வதற்கு மிகப்பெரிய ஒரு உழைப்பும், பிரம்மாண்டமான் இச்சமூகத்தினுடைய உழைப்பும், எட்டு கோடி தமிழர்களுடைய சிந்தனையும் ஒரு புள்ளியில் குவிந்த உழைப்பும் தேவைப்படுகிறது. இப்படி இவர்கள் அனைவரும் அந்த ஒரு மையப் புள்ளியில் சங்கமிப்பதற்கு அந்த ஒரு நூற்றாண்டுகால அவகாசம். ஆகவே என்னுடைய கணக்கீட்டின்படி தமிழில் பேசுவதை பெருமையாக நாம் நினைப்பதற்கு இன்னும் நூறாண்டுகாலம் ஆகும்.

35 பாடல் எழுத வாய்ப்பு தேடும் இளம் கவிஞர்களுக்கு தங்களின் ஆலோசனை ?

முறையான பயிற்சி பெறுங்கள், நேர்மையாக முயற்சி செய்யுங்கள்... இவை இரண்டும்தான் அவர்களுக்கு சொல்ல வேண்டிய ஆலோசனை, கருத்து. இது பாடல் துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லை. திரைத்துறை தவிர மற்ற எல்லா துறைகளுக்கும் வாய்ப்பு தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நான் எல்லா மேடைகளிலும் சொல்லுகின்ற ஒரே விஷயம்... சிபாரிசுகளை புறக்கணியுங்கள், அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள், அவமானத்தை சேர்த்து வையுங்கள். இவை மூன்றும் உறுதியாக உங்களை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய தனித்துவமான திறமையை நாளுக்கு நாள் நீங்கள் புதுப்பித்துக்கொண்டே வந்தால் அந்த தனித்துவமான திறமையே உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுத்துவிடும். இதுதான் அவர்களுக்கு சொல்ல விரும்புகின்ற ஆலோசனை.

36 பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர்கள் விவரிப்பது உங்கள் கற்பனையைத் தூண்டும் வகையில் உள்ளதா?

நிச்சயமாக. இயக்குநர்கள்தான் எப்படிப் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தினுடைய கர்த்தா, தந்தை. ஆக அவருடைய கற்பனைக்கு இணை சேர்ந்து சிறகு விரிப்பதுதான் எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களுடைய பங்களிப்பு. அந்த வகையில் கவிஞர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில பாடல்கள், இயக்குநர்களுடைய பார்வையில் இருந்து விலகி முழுமையாக ஒரு கவிஞனுடைய சிறக்கடிப்பிற்குள் வரும். ஆனால், பெரும்பான்மையான பாடல்கள் இயக்குநர்களுடைய கதை, அவருடைய விவரிப்பு, அவருடைய காட்சி அமைப்பிற்குள் சிறகடித்தால் மாத்திரமே மிக அழகாக இருக்கும். அந்த வகையில் இயக்குநர்களுடைய காட்சி விவரிக்கும் தன்மை கவிஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு தூண்டுகோல்தான்.

37 கவிஞராக குடும்பத்தினரின் சம்மதம்? ஒத்துழைப்பு?

நான் கவிஞராக மட்டுமல்ல நடிகராகவும் கூட இன்று பரிணமித்திருப்பதற்கும் மற்ற எல்லாவற்றிற்குமே கூட என்னுடைய குடும்பத்தினுடைய மிகப்பெரிய ஒத்துழைப்பும், சம்மதமும், ஆர்வமான ஈடுபாடும் அனைத்தும்தான் காரணம். அதிலும் குறிப்பாக என்னுடைய தந்தை திரு. வி. பாலகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய அத்தனை பயணத்திலும் என்னோடு கூடவே நடந்து என்னுடைய ஏற்றம் இறக்கம் என அத்தனை நேரங்களிலும் வழி நடத்தி செல்லுகின்ற ஒரு மிகப்பெரிய சக்தியாவார். அவருடைய ஆலோசனைகள், அவருடைய முடிவுகளின்படிதான் என்னுடைய ஒவ்வொரு செயலும் இருக்கும். ஞாபகங்கள் திரைப்படத்தின் பொருளாதார சரிவாகட்டும் அல்லது இப்போது மூன்றாவது படத்திற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகட்டும் எல்லாவித உணர்வுகளுக்குமான மகிழ்ச்சியோ, துக்கமோ, மிகப்பெரிய வெற்றியோ, மிகப்பெரிய வாய்ப்போ எதுவாக இருந்தாலும், எனக்கு தந்தையாருடைய முழுமையான சம்மதத்தையும், அவருடைய ஆசிகளையும் வைத்துதான் என்னுடைய பயணம் என்பது அமைந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினுடைய சம்மதமும், ஒத்துழைப்பும் நூறு சதவீதம் முழுமையாக இருக்கிறது.

38 பாடல் ஒலிப்பதிவில் சொற்களின் உச்சரிப்பு சிதைக்கப்பட்டு... அதை திருத்தியிருக்கிறீர்களா? என்ன பாடல்?

பாடல் உச்சரிப்பில் திருத்தம் என்று எடுத்துக்கொண்டால் நிறைய இருக்கும். இன்றைய பாடகர்களில் பெரும்பாலும் முறையான தமிழ்மொழி படித்தவர்கள் மிக குறைவு. அதிலும் அந்நிய மொழிப் பாடகர்கள் பெருகிவிட்ட கால கட்டத்தில், அவர்களை எந்த வகையிலும் குறை சொல்லுதல் முடியாது. நாம்தான் அழைத்துக்கொண்டு வந்து பாட வைக்கிறோம். குரல் நமக்கு பிடித்திருக்கிறது. அவர்களுடைய குரல் வளத்தை நம்முடைய மொழிக்குள் கொண்டு வரும்போது, நம்முடைய மொழியுனுடைய லாவகங்கள் அவர்களுக்கு நா வசப்படாததால், சில நேரங்களில் அந்த வார்த்தைப் பிழைகள் ஏற்படுகிறது. ஒரு சில பாடல்களில் அவர்கள் தவறாகப் பாடி திருத்த இயலாமல் அந்த இனிய குரலின் காரணமாக அந்தப் பிழையை மன்னித்தும் பாடல்கள் பதிவு பண்ணிய நிகழ்வுகள் உண்டு. அந்த வகையில் அந்நிய மொழி பாடகர்கள் பாட வந்தாலே அதில் வார்த்தை திருத்தங்கள் நிச்சயமாக இருக்கும். ஏன் இன்னும் சொல்லப்போனால் ஒரு சில பாடகர்கள் பாடும்போது சில வார்த்தைகளையே மாற்றவேண்டிய சூழ்நிலைகூட ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாடகரை இழக்க முடியாது, ஒரே ஒரு வார்த்தைக்காக நல்ல ஒரு குரல் வளம் மிக்க பாடகரை மாற்ற முடியாது. ஆகவே அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே முடியாது அப்படியே உச்சரித்தாலும் புரியவே இல்லை என்ற பட்சத்தில் கண்டிப்பாக வார்த்தைகளை மாற்றிக் கொள்ளும் நிலையில்தான் இன்று மொழிக்கான முக்கியத்துவம் இருக்கிறது.

39  வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உங்கள் செய்தி? வேண்டுகோள்?

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மிகப்பெரிய நன்றிகளை உரித்தாக்க வேண்டும். தமிழ் சினிமா பாடல்கள் உலகில் மிகப்பெரிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றால் அது வெளிநாடு வாழ் தமிழர்களால் தான். அதிலும் தமிழகத்தில் இருந்து சென்ற தமிழர்களும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகமெங்கும் பரவி இருக்கின்ற இந்த சூழலில் அவர்களால் தமிழ்க்கலையும், தமிழ்க்கலையின் வடிவமாக சினிமாவும் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கின்றது. அது வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. ஒரு திரைப்படம், ஒரு பாடல் அவர்களுக்கு போய் சேர்ந்த பிறகு அவர்களுக்கு அந்தப் பாடல் பிடிக்கிறதோ இல்லையோ, அந்தப் பாடலைப்பற்றி உடனே கடுமையான விமர்சனத்தை முகப்புத்தகம் (ஃபேஸ்புக்) பகுதியில் வெளிப்படுத்துவது என்பது மிகப்பெரிய பங்களிப்பாக எனக்கு இருக்கிறது. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதைப்போல எனக்கு தோன்றுகின்றது. அதேபோல் வேறுவழியில்லாமல் இணையதளங்களில் படங்களை பார்க்க அவர்களுக்கு நேருகிறது. ஏனென்றால், அவர்களுக்கு முறைப்படி திரைப்படங்களை தியேட்டர்களில் போய் பார்ப்பதற்கு நேரம் குறைவு. பல ஊர்களில் முறைப்படி படங்கள் வெளியாவதில்லை. ஆகவே அவர்கள் தமிழ் சங்கங்கள் போன்ற பல அமைப்புகளை தொடர்பு கொண்டு தமிழ் படங்களை வெளியிடச்செய்து படங்களை பார்த்து மகிழலாம். திருட்டு சிடி என்பது ஒரு சின்ன துவாரம், அதுவே பின்னாளில் பெருகிப் பெருகி பெரிய ஆபத்தை விளைவிக்கும். அதனால் அதை தவிர்க்க வேண்டும் என்பதே எனது செய்தியும் வேண்டுகோளும். திரைப்படத் துறை என்பது வணிக ரீதியாகவும், வெளிநாடு வாழ் தமிழர்களையும் நம்பி இருக்கிறது என்பதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. அதனால் மிகச் சரியான படங்களை, சிறிய படமாக இருந்தாலும் அந்தத் திரைப்படங்களையும் பெரிய படங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தோடு பாருங்கள். அப்பொழுதுதான் அந்தப் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட படங்களில் வெளிவருகின்ற பாடல்களையும் கேட்டு அந்தப் பாடல்களையும் பெரிய அளவில் வெற்றிபெறச் செய்யுங்கள் அதில் உங்கள் ரசனையை செலுத்துங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.

40 யாருடைய தமிழ் பேச்சை இன்னும் கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

ஆரம்பத்தில் இருந்தே எனக்குள் தமிழுக்கான ஆர்வத்தையும், தமிழுக்கான படைப்பு இலக்கியத்தைப் படைக்க வேண்டும் என்ற தூண்டுதல்களையும் எனக்குள் ஏற்படுத்திய முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் அய்யா அவர்களுடைய பேச்சு என்பது இன்றைக்கும் எனக்கு மிகப்பெரிய ருசியான பேச்சாகத்தான் இருக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்க மிகவும் ஆசைப்படுவேன். அதையும் கடந்து நிறைய பேச்சாளர்களுடைய பேச்சையும் கேட்கப் பிடிக்கும். வைகோ அவர்களின் மிகப்பெரிய ஈர்ப்பான பேச்சும் எனக்கு பிடிக்கும். தமிழருவி மணியன், சுகிசிவம் போன்ற மிக அற்புதமான பேச்சாளர்கள், சொற்பொழிவாற்றல் மிக்கவர்கள் ஏராளமானவர்கள் தமிழகத்தில் நிரம்பி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய இனிய நண்பர்கள் லியோனி அவர்களும் சரி, பேராசிரியர் ஞானசம்பந்தரும் சரி, மற்றும் அற்புதமான பட்டிமன்ற பேச்சாளர் பெரியவர் சாலமன் பாப்பையா அவர்களுடன் எல்லாம் பல நிகழ்வுகளில் நேரிடையாகவே ஒன்றாகவே சென்று கலந்து பேசியிருக்கிறோம். அப்படிபட்ட சூழலில் அவர்களுடைய பேச்சுக் கலவையில் மிகப் பெரிய ரசிகனாகவே இருந்திருக்கிறேன். கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களுடைய பேச்சு மிக மிக பிடித்தமான பேச்சு. இப்படி ஆசைப்படுகிற பட்டியல் மிக நீளமானது.

41 தமிழ்ச் சங்கங்கள் பற்றி தங்கள் கருத்து? தமிழ்ச் சங்கங்கள் தமிழை வளர்க்கின்றனவா?

இன்றைக்கு உலகத்தில் தமிழ் சங்கங்கள் இல்லாத தேசங்கள் இல்லை, ஊர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழ்ச்சங்கங்கள் வளர்ந்திருக்கின்றன. ஆனால் கடுமையான விமர்சனங்களும் தமிழ் சங்கங்களின் மீது உண்டு. ஒவ்வொரு தமிழ் சங்கத்திற்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அவர்களுக்குள் ஒரு அரசியல் என்றால் அதிமுக, திமுக என்ற அது குறித்த அரசியல் இல்லை. ஒவ்வொரு தமிழ் சங்கமும் ஒரு ஒற்றுமையான முழுமையான தமிழ் சங்கமாக இருக்கிறதா என்றால் இல்லை. ஒரு ஊரில் இரண்டு தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்றால் அங்கு மூன்று தமிழ் சங்கங்கள் இருக்கிறது. இரண்டு பேரும் தனித்தனியே ஒரு சங்கம் வைத்திருப்பார்கள். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு சங்கம் வைத்திருப்பார்கள். அப்படி தமிழர்களுடைய மனோநிலை, குறிப்பாக அயலகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுடைய பெரும்பாலான மனோநிலை இப்படியாகத்தான் இருக்கிறது. இப்படி பல சங்கங்கள் ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.

நான் எந்த நாட்டில் தமிழ் சங்க நிகழ்ச்சிகளுக்கு போய் சேர்ந்தாலும், மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டுப் போவார்கள். விழா முடிந்தபிறகு இந்த விழாவைவிட நாங்கள் இன்னும் சிறப்பாக செய்திருப்போம் என்று இன்னொரு சங்கத்தார் வந்து சந்தித்துவிட்டுப் போவார்கள். இந்த நிகழ்வை சந்திக்காத ஊரே எனக்கில்லை என்று சொல்லலாம். எனக்கென்றில்லை, எவருக்குமே இருக்காது. அப்படிபட்ட வகையில் தமிழர்களுடைய சங்கங்கள் பல்கிப் பெருகி கிடக்கின்றது. குஜராத்தில் எத்தனை லட்சம்பேர் இருந்தாலும் அங்கே ஒரு குஜராத் அமைப்புதான் இருக்கும். மலையாளிகள் எத்தனை பேர் இருந்தாலும் அங்கு ஒரு மலையாள சமாஜ் ஒன்றுதான் இருக்கும். அதுமாதிரி தமிழர்களும் ஒரு சங்கத்தை நிறுவி தங்களுடைய ஒட்டுமொத்த பங்களிப்பையும், பதவியின் காரணமாக பிரித்துக்கொள்ளாமல் செயல்பட வேண்டும். பிரிக்கப்பட்டு வீழ்ந்த சரித்திரம்தான் நம்முடைய இரண்டாயிரம் ஆண்டு கால சரித்திரமுமே. இன்னமும் இந்த சரித்திர தரித்திரம் பின்தொடராமல் அவர்கள் எல்லோரும் ஒருமித்த புள்ளியில் செயல்பட்டால் ஒரு அற்புதமான பெரிய வளர்ச்சியை உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழச் சங்கங்கள் பெறமுடியும்.

தமிழ்ச் சங்கங்கள், குறிப்பாக அயலகத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய பாதைகளை பார்வைகளை தயவு செய்து விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும். இன்னமும் அடித்துத் துவைத்த பழைய இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை, இலக்கிய நிகழ்ச்சிகள் என்ற போர்வையில் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளை திருப்பித் திருப்பி நடத்துவது தமிழை வளர்க்ககூடிய நிகழ்ச்சியாக கண்டிப்பாக இருக்காது. புதிய புதிய இளைஞர்களை, புதிய புதிய படைப்பாளர்களை, புதிய புதிய வடிவங்களை அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய தமிழ் சங்கங்களுக்குத்தான் இருக்கின்றன. அந்தப் பொறுப்பினை உணர்ந்து புதிய வியூகங்களில் தமிழ் நிகழ்வுகளை நடத்துவதற்கு அவர்கள் சித்தமாக வேண்டும், தயாராக வேண்டும். அதற்கு அவர்களிடையே மிகப் பெரிய ஒற்றுமை திரண்டால் மட்டுமே சாத்தியம்.

42 படிக்கும்/ எழுதும் பழக்கம் குறைந்து வருவது பற்றி?

பார்த்துப் பழகும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய கலாச்சாரத்தில் கண்டிப்பாக படிக்கும், எழுதும் பழக்கம் குறையத்தான் செய்யும். ஆனால் பார்க்கும் அனுபவத்தை விட படிக்கும், எழுதும் அனுபவம் என்பது ஒரு மிகச் சிறந்த மனிதனை உருவாக்குகின்ற அனுபவமாக அமையும் என்பதை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டவர்கள், படிக்கும் எழுதும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று கூட எனக்கு வருகின்ற வாசகர் கடிதங்களை, ஒரு கடிதத்தைக் கூட நான் கிழித்தோ, அல்லது தேவையில்லை என்று புறக்கணித்ததோ கிடையாது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வந்த வாசகர் கடிதங்களை சேமித்து வைத்திருகின்ற ஒரு நல்ல பழக்கத்தை எனது தந்தையார் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால் அத்தனையுமே கோப்புகள் போடப்பட்டு அவைகள் ஒரு இடத்தில் பத்திரமாய் இருக்க்கின்றன. காரணம் ஒரு தாய் தந்தையருக்குக் கூட கடிதம் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற இந்தப் பொருளாதார நிர்ப்பந்த உலகத்தில் எங்கேயோ இருக்கின்ற ஒரு எழுத்தாளனுக்கு, எங்கேயோ இருந்து ஒரு வாசகன் ஒரு கடிதத்தை உள்ள ரீதியாக, உணர்வு பூர்வமாக எழுதுவது என்பது எவ்வளவு பெரிய காரியம். அதனால் அந்தக் கடிதத்தை என்னால் பிரிவதற்கு மனமே வராது. அவ்வளவையும் சேமித்துதான் வைத்திருக்கிறேன். படிக்கும் எழுதும் ஆர்வம் என்பது கண்டிப்பாக வருகிற தலைமுறையிலாவது தொடர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

43 தமிழில் புதிய சொற்கள் உருவாக்கும் முயற்சி?

தமிழில் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்ற முயற்சி ஆரோக்கியமானது, வரவேற்கப்படவேண்டியது. கண்டிப்பாக தமிழ் என்பது ஒரு மிகப்பெரிய ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளை ஆதிச்சநல்லூர் கல்வெட்டுகளை எல்லாம் கடந்து ஆழ வேரூன்றிய ஒரு மகா மொழி. மகா கடல்... அந்தக் கடலுக்குள் இருந்து புதிய அலைகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். பல நவீன படைப்பிலக்கியங்கள் வெளி வந்துகொண்டேதான் இருக்கும். பல இலக்கணங்கள் உடைக்கப்படும். பல இலக்கியங்களை தவறு என்று சொல்லி புதிய இலக்கியங்கள் பிறக்கும். பல சர்ச்சைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். பல சமநிலை கருத்துக்கள் வந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றால், தமிழ் என்பது இவ்வளவுதான் என்று அறுதியிட்டு, இறுதியிட்டு வரையறுக்கப்பட முடியாத ஒரு விசாலமான அண்டப் பேரண்டமான ஒரு மொழி. இதற்குள் பல பிரளயங்கள், பல சுகப் பிரசவங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கும். புதிய சொற்களை, புதிய படைப்புகளை உருவாக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆரோக்கியமான முயற்சி.

44 தமிழ் ஆர்வத்திற்குக் காரணமானவார் -?

கவிதைகள் வாயிலாக தமிழ் ஆர்வத்தை எனக்குள் அதிகமாக வளார்த்துவிட்டவார் கவிவேந்தார் மு.மேத்தா, அதன்பிறகு இலக்கிய படைப்புகளுக்கு எனக்கு வகுப்பாக இருந்தவார் கவிப்பேரரசு வைரமுத்து, அதைத்தொடார்ந்து திரைப்படப்பாடல்களில் எனக்கு மிகப்பொpய எடுத்துக்காட்டாக விளங்கியவார் கவிப்பெருந்தகை வாலி அய்யா அவார்கள், மற்றுமல்லாமல் திரைப்படப்பாடல் துறையில் அனைவருக்குமே ஞானகுருவாக விளங்குகின்ற கவியரசு கண்ணதாசன், அடிப்படைத் தமிழ் உணார்வுக்கு முத்தமிழ் அறிஞார் டாக்டார் கலைஞார் அவார்கள். இப்படியாக இத்தனை ஆசிரியார்களின் எழுத்துக்களின் மாணவன்தான் நான்.

45 பள்ளி- கல்லுரி கல்வியின்போது எழுதி வெளியிட்ட கவிதை நுல்கள்?

எனது 19வயதிலிருந்து 24 வயதிற்குள் எழுதிய படைப்புகள் 01. இந்தச் சிப்பிக்குள் 02. சுதியோடு வந்த நதி 03. நந்தவனத்து நட்சத்திரங்கள் 04. நிழலில் கிடைத்த நிம்மதி 05. ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது

46 சிறுகதை, புதினம், நாடகம் எழுதியுள்ளீர்களா?

போர்புறா என்ற நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது.

47 சென்னை - திரைப்படத் தொடார்பு எப்படி?

பொறியியல் கல்லூரியில் சோர்ந்து படிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆவலாக இருந்தது. ஆனால் அதற்கான மதிப்பெண்கள் வராது போனதால் மீண்டும் மறுதோர்வு எழுதுவதற்காகக் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்பும் தனிமையும் ஏற்கனவே என்னுள் உறங்கிக்கொண்டிருந்த அந்த இலக்கிய தாகத்திற்கு இன்னும் அதிகமாக நீர் வார்த்தது. அந்த இடைவெளி காலத்தில் நான் நிறைய கவியரங்கள், இலக்கிய சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு இலக்கிய ஆர்வத்தை வளார்த்துக் கொண்டதோடு, இலக்கியப் புத்தகம் படிக்கும் தன்மையையும் வளார்த்துக் கொண்டேன். இப்படி முழுமையாக இலக்கியம்... இலக்கியம்.... தமிழ்.... தமிழ்... என்றே ஏங்கிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக்கு ஒரு பொருளாதார பிடிப்பு தேவைப்பட்டது. அந்த சமயத்தில்தான் எனது தந்தையார் திரைப்படத் துறைக்கு முயற்சி செய்தால் என்ன என்ற ஒரு மாபெரும் விருட்சத்திற்கான விதையை விதைத்தார். அதற்கான பாதையில் நான் அதன்பிறகு நகர ஆரம்பித்து, அதற்கான தேடலில்... அதற்கான பயிற்சியில் இறங்கினேன். தேடலின் பலனாய் இயக்குநார் திலகம் திரு.கே. பாக்கியராஜ் அவார்கள் இயக்கிய ஞானப்பழம் என்னும் படத்தில்… “உன்னைப் போல் ஒருத்தி மண்ணிலே பிறக்கவில்லை என்னைப் போல் யாரும் உன்னைத்தான் ரசிக்கவில்லை...” என்கிற ஒரு காதல்மயமான பாடல். எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது திரையில் ஒலிக்காதுர் ஒலிநாடாவில் மட்டுமே இருக்கும். இது என் ஆசைக்க ஒரு பாலமாக அமைந்தது. இதுவே என்தேடலை மேலும் தீவிரப்படுத்தியது சென்னைக்கும் எனக்கும் திரைப்படத்துறைக்கும் ஒரு பாலமிட்டது இயக்குநார் திலகம் திரு.கே. பாக்கியராஜ் அவார்கள்தான்.

48 உங்களது எந்தப் படைப்பு முதலில் நுலாக வந்தது?

பத்தாம் வகுப்பிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை நான் எழுதிய சில துண்டுத்துண்டு கவிதைகள் மற்றும் மரபுக்கவிதை வடிவில் நான் எழுதிய கவிதைகள் பல. ஆனால் அது இலக்கண முறைப்படி தவறாக இருக்கும். இந்தக் கவிதைகளை எல்லாம் சோர்த்து இந்தச் சிப்பிக்குள் என்ற கவிதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டோம்.

49 பத்திரிக்கைத் துறை அனுபவம்?

பாக்கியாவில் வெளிவந்த உடைந்தநிலாக்கள் என்னும் சாpத்திர கவிதைத் தொடார் வாசகார்களின் மத்தியில் நீங்கா இடம்பெற்றது. கல்கியில் தொடராய் காற்சிலம்பு ஓசையிலே என்னும் தலைப்பில் சிலப்பதிகாரத்தில் முக்கிய நிகழ்வுகளை மட்டும் புதுக்கவிதை வடிவில் சொல்ல முயற்சித்ததன் விளைவு. அற்புதமான இபபுதுக்கவிதைக் காவியம்ர் குங்குமத்தில் கடவுள் வருகிறான் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் சமூக விசயங்களை அடிப்படையாகக்ர்ர்கொண்டு எழுதியது. அதைத் தொடார்ந்து தேவதைகளின் தேசம் என்னும் தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் காதல் கவிதைகள் தொடார்ந்து பல வாரங்கள் எழுதியது நக்கீரனில் மறைந்து கிடந்த சாpத்திரப்புதையல்களை, உண்மைகளை வெளிக்கொணரும் விதமாய் அரண்மனை ரகசியம் என்னும் சாpத்திர நாவல் தொடரர் சுமார் ஓராண்டுகாலமாய் வெளிவந்து கொண்டிருக்கிறது.

50 கவிதை பற்றி தங்களின் கருத்து?

உள்ளத்தின் உணார்வுகளை, உணார்ந்த விசயங்களை பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் படைப்பதே கவிதை என்பது என் கருத்து. மேலும் கவிதை என்பது நாம் வாழும் காலத்தை எதிர்கால சங்கதியினருக்குப் பிரதிபலிக்ர்கும் ஒரு மாயக்கண்ணாடியாகும்.

First <Prev[1] 2 3 4 Next > Last
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு