தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

சுவாசமே...சுவாசமே

பாடல் தலைப்பு

சுவாசமே...சுவாசமே

 
Movie Name  தெனாலி 
கதாநாயகன்   கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர்   இயக்குநர்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

அந்தவொரு நாள்பொழுதில், ‘நீவருவாய் என, வானத்தைப்போல’ படப்பாடல்களைத் தொடர்ந்து வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் இடம்பெற்ற கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு’  எனும் பாடல் மிகப்பெரிய அங்கீகாரத்தைப்  பெற்ற காலகட்டத்தில், கைவசம் பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் குவிந்திருந்தன.

இசையமைப்பாளர்கள் திரு.தேவா, திரு.எஸ்.ஏ.ராஜ்குமார், திரு.வித்யாசாகர்  போன்றோர்களோடும், ஒரு அழகான நட்புப் பூவாளியைப்போல் நெஞ்சம் எங்கும் நிரம்பி இருக்கின்ற யுவன் முதலான அனைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பரவலாக நான் பாடல் எழுத ஆரம்பித்திருந்த காலகட்டம்.

நீண்டபொழுதுகளாகவே என்நெஞ்சிற்குள் நிரம்பியிருந்தது ஒரு கனவு. இன்றைய ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையிலே ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என்கிற வேட்கைதான் அது!

அந்த வேட்கையானது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் உயரமான இசையில்! நுட்பமான இசைக்கருவிக்குள் தமிழ் நுழைந்து வெளியேறும் போது. ஒரு புது பரிணாமம் எடுப்பதை என்னால் உணர முடிந்தது. அதுநாள் வரையில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையிலே காவியக்கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரைத்தவிர வேறுயாரும் பாடல் எழுதியிருக்கவில்லை. 

என்போன்ற அடுத்த தலைமுறை பாடலாசிரியர்கள் நுழைய முடியாத கோட்டையாக ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசைவளாகம் இருந்து வந்தது.  ஆனால் பின்னாளில் அந்த எண்ணத்தை எனக்குநானே உடைத்துக் கொண்டேன். காரணம்.. அதுவரையாரும் முயற்சிக்காததே அந்தக் கோட்டைக்கதவு மூடப்பட்டு இருந்ததற்கான காரணம் என்பது புரியவந்தது. 

இனியநண்பர் இயக்குநர் திரு.அழகம்பெருமாள் அவர்கள் பிரமிட் மூவிஸ் சார்பில் இளைய தளபதி விஜய் நடித்த உதயா என்கிற திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஒப்பந்தமாகி இருந்த பொழுது, நான் அடிக்கடி இயக்குநர் அழகம்பெருமாள் அவர்களைச் சந்தித்து வந்ததன் காரணமாக  முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையமைப்பில் பாடல் எழுதுவதற்கான மெட்டு வழங்கப்பட்டது.

மிகமிக வாஞ்சையோடு அந்த இசைப்பேழையினைப் பெற்று, இரவுபகல் பாராது வார்த்தைகளைக் குழைத்து கவிதைகளுக்காக உழைத்து பாடலை நிரப்பிக்கொண்டு சென்று இயக்குநரிடம் தந்தேன். பாடலைப்படித்துப்பார்த்த அழகம்பெருமாள் அவர்கள் மிகவும் சிலாகித்து, புதியவடிவில் அமைந்திருக்கிறது. இதை ரகுமான் அவர்கள் மிகவும் விரும்புவார் என்று உறுதிபடச் சொன்னார். ஆனால் எதேட்சையாய் அப்பாடல் படத்தில் இடம்பெறாமல் வேறொரு மெட்டானது பதிவுசெய்யப்பட்டு விட்டது என்ற தகவல் பின்னாளில் அறிய நேர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக, இனிய நண்பர் இயக்குநர் ப்ரவின்காந்த் அவர்கள் ஒரு படத்திற்குப் பாடல் எழுதுவதற்காக அழைத்தார். ப்ரவின்காந்த் அவர்களின் முந்தைய இரண்டு படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்ததால், பெரும் எதிர்பார்ப்போடு சென்ற எனக்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் ஹிந்திப்பட மெட்டு ஒன்று வழங்கப்பட்டது.

மீண்டும் அதே உழைப்பு! அதே பிரமிப்பு! அதே ஆர்வத்தோடு உழைத்தேன்.  சோதனையாய் அந்தப்பாடலும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.  பெரும் சலிப்புற்ற எனக்கு, எப்போதுமே ஒரு குணம் உண்டு, ஒரு முயற்றி பலனளிக்காது போகையில் இது சரிபட்டு வராது என்று விடுபட்டு என்னால் வெளியேற முடியாது.  அது என்துறை, என்தரம், என் சூழல் சார்ந்த முயற்சியாக இருப்பின் தொடர்ந்து அதை அடையும்வரையில் முயற்சித்துக்கொண்டே இருப்பது என்னுடைய ஜீவகுணம்.

அந்தவகையில் நேரடியாக ரகுமான் அவர்களைச் சந்தித்து வாய்ப்புப்பெற வேண்டும் என்கிற எண்ணம் முன்பை விட அதிகமாக வந்தது.  அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல..!

அவருடைய பாடல்பதிவு கூடத்தில் எப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கும் வடநாட்டு காவல் அதிகாரியில் இருந்து, அவருடைய இன்ஞ்சார்ஜ் சாமித்துரை மற்றும் மேனேஜர் நோயல் என அனைவரையும் தொடர்புகொண்டு ரகுமான் அவர்களை சந்திப்பதற்கான திட்டவட்டமான தெளிவான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் எளிதில் சென்று சந்தித்துவிட முடியாத உயரத்தில் இருந்த அவரை அணுகுவதற்கு எந்தவித உபாயமும் எனக்குக் கிடைக்கவில்லை. அப்போது என்னுடைய இசைத்துறை நண்பர் ஜெய் ஒரு யோசனையைச் சொன்னார்!

இப்போதுகூட அதுபிரபலம். அதாவது எந்த விசே­ நாட்களிலும் சரி, அல்லது இஸ்லாமியர்களுக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிக்கிழமையன்றும் சரி, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இல்லத்தில் இருந்து பிரியாணி உணவு செய்யப்பட்டு, அது ஏழை எளியோருக்கு அன்னதானமாக ஏராளமான இடங்களில் வழங்கப்படுவது வாடிக்கை!

அந்த பிரியாணியை செய்கின்ற ஒரு பாய் திருவல்லிக்கேணியில் இருக்கிறார். அவரை சந்தித்து அவரது உதவியைப் பெற்றால் கண்டிப்பாக ரகுமான் அவர்களின் இல்லத்திற்குள்ளே நுழைய முடியும். அந்தநேரத்திலே தன் இல்லத்தின் பின்புறம் இருக்கும் மேற்குப்பகுதி சார்ந்த மேடையில் ரகுமான் அவர்கள் தொழுகை நடத்த வரும்போது அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு ராணுவத்துறை மூளையோடு சந்தித்து ரகுமான் அவர்களை அணுகுவதற்கான அந்த முயற்சியையும் மேற்கொண்டேன்.

திருவல்லிக்கேணியில் தெருத்தெருவாய் ஏறியிறங்கி, இறுதியில் பிரியாணி செய்யும் பாய்வீட்டை கண்டுபிடித்தோம். ரகுமான் வீட்டிற்குப் பிரியாணி செய்யும் பாய் மிக எளிமையாய், மிக சாதாரணமாய் அன்றைய பொழுதில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். எதிர் தேநீர் கடையில் காத்திருந்த எங்களுக்கு அவர்தான் அந்த பாய் என்று அடையாளம் காண்பதொன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.  அவர் அருகில் வந்ததுமே அவர்மீது பிரியாணியின் நறுமணம் அடித்தது.

நாங்களாகவே  அவருக்கு தேநீர் வாங்கித் தந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். உங்களிடம் இருந்து ஒரு சிறிய உதவி என்று கேட்டோம். எங்களது உபசரிப்பில் நெகிழ்ந்துபோன அவர் ‘‘எவ்வளவு பேருக்கு வேணும்... இப்படி காலையில வந்து சொன்னா எப்படி.. சரி பரவாயில்ல.. பார்க்க நல்ல பசங்களா தெரியுறீங்க.. சீக்கிரமா அட்வான்ஸ் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போங்க.. மத்தியானம் அனுப்பி வைக்கிறேன்’’என்றார்.

நாங்கள் அவரிடம் ஏதோவொரு விருந்து நிகழ்ச்சிக்கு பிரியாணி ஆர்டர் கொடுக்கத்தான் வந்திருக்கோம் என்று நினைத்துக்கொண்டு அவர்கூற, அதன்பிறகு அவரிடம் மிகமிக பிரயர்த்தனப்பட்டு உண்மைநிலையை விளக்கிக் கூறினோம்.

நானொரு கவிஞன் என்றும்; திரைப்படங்களிலே பாடல் எழுதிக் கொண்டு வருபவன் என்றும்; கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலரு என்கிற பாடலை எழுதியது நான்தான் என்றும் கூற, அவருக்கு அதைப்பற்றி எல்லாம் எந்தவித விசயஞானமும் இல்லை. கறுப்புத்தான் எனக்குப்புடிச்ச ஆடு என்று சொன்னால் கூட தெரிந்திருக்கும். ஆட்டைப் பற்றி அறிந்து வைத்திருந்தவர் என்பாட்டைப் பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை.

பிறகு, பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கேட்க ரகுமான் அவர்களை சந்திப்பதற்கு, பாய் அவர்களை ஒரு பாலமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம் என்ற உண்மை அவருக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்க, அதனுள் ஒளிந்திருந்த ஆர்வத்தை அவர் கண்டு கொண்டாலும், இது தனக்குத் தேவையில்லாத ஒன்று என்று சிந்தித்தாரோ என்னவோ பதில் ஏதும் சொல்லாமல் எங்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்ல முயன்றார்.

விடாப்பிடியான முயற்சி பிரியாணி கடை பாய் வீட்டின் முன்புறம் நடந்து கொண்டிருக்க, அவரும் எங்களை  ஒரு வெள்ளிக்கிழமை அன்று ரகுமான் அவர்களின் வீட்டிற்கு அழைத்துப் போவதாய் உறுதி அளித்தார். பல வெள்ளிகள் கடந்து கொண்டிருந்தன.  பல ஆடுகள் பிரியாணியாய் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இலக்கை சந்திப்பதற்குத்தான் நேரம் வாய்க்கவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். தெனாலி’ என்கிற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிற விதத்தைப்பற்றிய செய்தி அது!  அதிலே பெரிய பாடலாசிரியரை வைத்து பாடல் எழுதாமல் புதிய பாடல் ஆசிரியர்களை வைத்து  பாடல் எழுதும் முயற்சிகளுக்கு  வரவேற்பு அளிக்கப் போவதாய்  வந்திருந்தது செய்தி! அதை உறுதிப்படுத்தும் வகையிலே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடைய உதவி இயக்குநர்கள் எனக்கு மிகச்சிறந்த உதவிகளைச் செய்ய,  இயக்குநர் திரு.கேஎஸ்.ரவிக்குமார் அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அவரிடம் என் நீண்ட கனவையும் நெடிய லட்சியத்தையும் பற்றிக் கூற, ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர், உறுதியாய் ரகுமான் அவர்களைச் சந்தித்து பாடல் எழுத வாய்ப்புத்தருவதாய் கூறினார்.

அப்போது, அங்கே வேடந்தாங்கல்போல் ஏராளமான பாடலாசிரியர்கள் குவியத் தொடங்கினார்கள். இளையகம்பன், கலைக்குமார், தாமரை போன்ற பலர் முயற்சித்துக் கொண்டிருக்க, ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இல்லத்தில் இருந்து சாமித்துரை அவர்கள் ஒருநாள் திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  நான் ஒருநொடியில் வானத்தை முட்டித் திரும்பினேன். இல்லத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டேன். விரைந்துசென்றேன்.   இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் அங்கே இருந்தார்.

புதியமுறையில் எழுதப்பட்ட பல்லவிகள் ஏராளமாக எழுதிக் கொடுக்குமாறு ரகுமான் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற தகவலைச் சொன்னார். அப்போதும் ரகுமான் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. அவர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார்.  புதிய பல்லவிகள் நிறைய எழுதிக்கொண்டு சென்றேன். அவற்றை ஸ்கேன் செய்து இமெயிலில் ரகுமான் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்ட மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரகுமான் அவர்களின் இல்லத்தில் இருந்து அழைப்பு வ்நதது. சென்றேன். அங்கே வெள்ளை உடையில் ஒரு ஆண்தேவதை (தேவதூதன்போல்) போல் நவீன இசையுலகின் உருவம் அமர்ந்து இருந்தது. என் கண்களிலே மெல்லிய துளிகள் துளிர்ந்ததை என்னால் இந்தநொடியிலும் உணர முடிகிறது.

இப்போதுகூட அவ்வப்போது அவரைப்பார்க்கின்ற பொழுதுகளில் ஒரு தெய்வாதீன தன்மையைப் பெற்ற வெள்ளைநிற ஜோதியைப்போல் என் கண்களுக்குள் தோன்றும்.  இசையை சுவாசித்துக்கொண்டிருக்கிற ஒரு சாதகப்பறவை நம் தமிழ் தேசத்தில் பிறந்து தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து இருக்கிறது என்கிற போது, அந்த மாபெரும் சரித்திர நாயகனின் அருகிலே அமர்ந்து அதன்பிறகு ஏராளமான பாடல்களை எழுதியதையும், எழுதியதற்கான வாய்ப்புகளை அவர் வழங்கியதையும் நினைக்கையில்  நெஞ்சுக்குள் ஆயிரம் ரோஜாத்தோட்டங்கள் குவிகின்றன.

தெனாலி திரைப்படத்திற்காக மெட்டு இல்லாமல் நான் எழுதிக்கொடுத்த பல பல்லவிகளில் இருந்து சிலவற்றை தேர்வுசெய்து அதில் சுவாசமே என்கிற வார்த்தையை வைத்து  அவர் ஒரு புதிய மெட்டினை இசைத்துக் கொண்டிருந்தார்.  அதை கேட்கக் கேட்க அந்த நொடிப்பொழுதுகளில் ஓசோன்படலம் விழிகளுக்குள் வந்துபோனது.

எங்கோ ஓரிடத்தில் நான் எழுதி வைத்திருந்த ஒரு வரி என்ன சொல்லி என்னைச் சொல்ல’ என்ற ஒன்று!  இந்த இரண்டு வரிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது இதை எடுத்து பல்லவியாக அமைத்துக் கொண்டால் என்ன.. என்றார்.  அதுதான் அவர் என்னோடு பேசிய முதல்பேச்சு. வியந்துபோனேன்.

ஏனென்றால் பாடல் வெளிவந்தபோது நிறையபேர் அந்த இரண்டு வரிகளைச் சுட்டிக்காட்டி பிரம்மாதம் என்று கூறிய பதிவுகள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.

ஜனரஞ்சகத் துவத்தின் நாடித்துடிப்பை கவிதை வடிவில் கண்டறிவதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மிகமிக நுட்பமானவர். அந்த வாய்ப்பை மிக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு  பல புதிய நுட்பமான  நிலவு இல்லாத புதன் கிரகம் நானே.. என்னுடன் சேர்ந்தாய் முழுநிலவானேன்.. என்ற வரியிலிருந்து நதிகள் இல்லாத அரபு தேசம் நான் எனக்குள் வந்தாய் நைல் நதியாக என்ற விஞ்ஞானவியல் செய்திகளை கவிதைகளாய் முதன்முதலாக திரைப்படப் பாடலுக்குள் செலுத்த ஆரம்பிக்க ஆச்சர்யப்பட்டார் இசைப்புயல்.

என்னுடைய கனவை நினைவாக்கி தெனாலி திரைப்படத்திலே சுவாசமே என்கிற பாடல் பதிவானது. இந்தப் பாடலை இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்குச் சமர்பிக்கிறேன்.

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு